
‘’ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் இந்தியா மற்றும் மோடி பற்றிய அதிரடி வீடியோ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
கடந்த செப்டம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் பங்கேற்று, குத்துச்சண்டை போடுவது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. இதன் கீழே, ‘’ ஜப்பானிய டிவிக்களில் தற்போது ஒளிபரப்பப்படும் இந்தியாவை பற்றிய அதிரடி கார்ட்டூன் வீடியோ..!! *வைரல் வீடியோ*,’’ என்று எழுதியுள்ளனர்.
இதே வீடியோவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் வீடியோவில் ஜப்பானிய மொழி எதுவும் பேசப்படவில்லை. அதேசமயம், அந்த வீடியோவின் கீழே India TV என்ற லோகோ இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றின் பெயராகும்.
எனவே, India TV இப்படி எதுவும் வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளதா, என்று அதன் இணையதளம் (IndiaTV Website) மற்றும் யூ டியுப் சேனல் (India TV YouTube)ஆகியவற்றில் சென்று விவரம் தேடினோம்.
நீண்ட தேடுதலுக்குப் பின், மேற்கண்ட வீடியோவின் உண்மையான லிங்க் கிடைத்தது.
OMG: Doklam standoff— India Vs China- Indo-China Boxing Match | Narendra Modi | Xi Jinping என்ற தலைப்பில், 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. OMG எனும் தலைப்பிட்டு, இந்திய அரசியல் நிகழ்வுகளை இந்த ஊடகம் விமர்சித்து, கார்ட்டூன் தயாரித்து வெளியிடுவது வழக்கம். அதில் ஒன்றுதான் இதுவும்.
இதன்படி, இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை கடந்த 2017ம் ஆண்டு முதலாக, தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இதுபற்றிய செய்திகளை Doklam standoff என்ற தலைப்பில் நாம் தொடர்ச்சியாகக் காணலாம்.
இதனை விமர்சித்து, இந்தியா டிவி ஊடகம் கடந்த 2019ம் ஆண்டு மேற்கண்ட வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அதனை பலரும், ஜப்பானிய ஊடகங்கள் ஒளிபரப்பி வரும் வீடியோ என்று தவறாகப் புரிந்துகொண்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, வாசகர்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் மோடி பற்றிய அதிரடி வீடியோ- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
