பீகாரில் பா.ஜ.க இப்படித்தான் வெற்றி பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய ஆய்வில் அந்த வீடியோ 2019ம் ஆண்டு ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் வாக்களிக்க வருவதற்கு முன்பு கட்சி ஏஜெண்ட் ஒருவர் சென்று வாக்களித்துவிட்டு வந்து அமரும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. அவருக்கு வாக்கு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது. நிலைத் தகவலில், "பீகாரில் பாஜக வெற்றி எவ்வாறு சாத்தியமானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை பொதிகை நியூஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 12 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் இந்த நிகழ்வு பீகாரில் நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், நிலைத் தகவலில், பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்று கேள்வி எழுப்பியதன் மூலம், இப்படி வாக்குப் பதிவு மையங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் பீகாரில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்து வைரலாக பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. 2019 மே 12ம் தேதி ரவி நாயர் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டு "இதைத்தான் ஜனநாயகம் என்று அழைக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Archive

இதற்கு ஹரியானா தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமெண்ட் செய்திருந்தது. ஃபரிதாபாத் மாவட்ட தேர்தல் அலுவலகம் "சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பார்வையாளர் இது தொடர்பான ஆய்வு நடத்தினார். அதில் இந்த சம்பவத்தால் தேர்தல் பாதிக்கப்படவில்லை என்று தெரிந்தது" என்று கூறப்பட்டிருந்தது.

ஹரியான, ஃபரிதாபாத், தேர்தல் முறைகேடு உள்ளிட்ட கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு ஹரியானாவில் இந்த சம்பவம் நடந்தது தொடர்பாக பல ஊடகங்களில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது.

Youtube

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது பா.ஜ.க நபர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி அமித் அத்ரி இது குறித்து கூறுகையில், "குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபரைத் தடுக்க முயன்றோம். ஆனால், அவர் முறைகேட்டில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். வாக்காளர்கள் அவருக்கு எதிராக திரண்டதால் அவர் தப்பித்து சென்றுவிட்டார்" என்று அவர் கூறியிருந்தார்.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

இந்த வீடியோவில் உள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வீடியோ 2019ல் ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களுடன் வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்த வீடியோ ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் பா.ஜ.க வெற்றி பெற்ற முறை என்று பகிரப்படும் ஹரியானா வீடியோ!

Fact Check By: Chendur Pandian

Result: False