அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த எல்லை காந்தி வந்தபோது எடுத்த புகைப்படமா இது?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கான் அப்துல் கஃபார் கான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கானின் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “பேரறிஞர் அண்ணாவின் மறைவின்போது தள்ளாத வயதிலும் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினர் எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார்கான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை M Ziyavu Deen என்பவர் 2020 ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த புகைப்படத்தில் கான் அப்துல் கஃபார்கான், தமிழக முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உள்ளனர். இதில் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் சிரித்தபடி வருகிறார். தங்கள் கட்சித் தலைவர் அண்ணா இறந்துவிட்டார் என்ற சூழ்நிலையில் அவர் சிரித்தபடி வருவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், அண்ணா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அப்படி கூட்ட நெரிசல் இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சியாக திரும்பியது போன்று உள்ளது.

அண்ணாதுரை 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி மரணமடைந்தார். அப்போது யார் யார் எல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்று ஆய்வு செய்து சற்று சிக்கலான விஷயமாகவே இருந்தது. அதிலும் கான் அப்துல் கஃபார் கான் பாகிஸ்தானில் வசித்து வந்தார். அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு, சென்னை வந்து சேர்வது எல்லாம் இன்றைக்கு உள்ளது போன்று விரைவாக நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பல ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு உடல் நலக் குறைவு காரணமாக விடுவிக்கப்பட்டவர் கான் அப்துல் கஃபார் கான். அதன்பிறகு இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ராஜாஜி மண்டபம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த அந்த கட்டுரையில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைந்த நேரத்தில் ராஜாஜி மண்டபத்தின் சிறப்பு, அங்கு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு பற்றிய தொகுப்பாக அந்த கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.

Search Linkthehindu.comArchived Link

குறிப்பிட்ட இந்த புகைப்படத்தில், “1969ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சென்னை வந்த எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கானுக்கு ராஜாஜி அரங்கில் வைத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு கான் அப்துல் கஃபார் கான் தமிழ்நாடு ஆளுநர் சர்தார் உஜ்ஜால் சிங்கின் மனைவி திருமதி உஜ்ஜால் சிங்குடன் வருகிறார். அருகில், தமிழ்நாடு பெண்கள் நலத் துறை அமைச்சர் சத்தியவாணி முத்து உள்ளார். படம்: தி இந்து கே.என்.சாரி” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதாவது பேரறிஞர் அண்ணா மறைந்து 11 மாதங்கள் கழித்து அவர் சென்னை வந்தது தெரியவந்தது. 

கான் அப்துல் கஃபார் கான் சென்னை வந்தது பற்றி வேறு செய்தி உள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்து வெளியிட்ட செய்தி கிடைத்தது. காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு நாள் பயணமாக சென்னை வந்த கான் அப்துல் கஃபார் கான் என்று குறிப்பிட்டிருந்தனர். 

thehindu.comArchived Link

இதன் மூலம் இந்த புகைப்படம் அண்ணா மறைவின்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த கான் அப்துல் கஃபார் கான் வந்தபோது எடுத்த படம் என்று தவறான தகவல் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த எல்லை காந்தி வந்தபோது எடுத்த புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False