FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

உத்தரப் பிரதேசத்தில் தலித் சாதி வன்கொடுமை காரணமாக பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கைகள் இரண்டும் பின்புறம் கயிறால் கட்டப்பட்ட பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா. காரணம் தலித் ஜாதி கொடுமை உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் திறமை டைம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 30 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாட்டில் எந்த ஒரு வன்முறை நடந்தாலும் அது உத்தரப்பிரதேசத்தில்தான் நடந்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்புவது தொடர் கதையாக உள்ளது. அதிலும் சாதிக் கொடுமை நடந்தாலே அது உத்தரப்பிரதேசம் என்று கூறுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட பெண்மணியின் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது, என்ன பிரச்னை என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, bhaskar.com என்ற இந்தி ஊடகத்தில் இந்த படம் பகிரப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தியில் வெளியான செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: bhaskar.com I Archive

அதில், “ஹசாரிபாக் ததிசாரியா காவல் நிலையப் பகுதியில் சிறிய பிரச்னை காரணமாக விதவை பெண் ஒருவரை எட்டு பேர் சேர்ந்து தாக்கியதாகவும், அவரை தாக்கிய மூன்று பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்பட்டிருந்தது. என்ன பிரச்னை என்று தெளிவாக இல்லை.  ஹசாரிபாக் எந்த மாநிலத்தில் உள்ளது என்று தேடிப் பார்த்தோம். அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரிந்தது.

ஹசாரிபாக், ததிசாரியா, பெண் மீது தாக்குதல் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். 

அப்போது ஜாக்ரன் என்ற பத்திரிகையில் சற்று விளக்கமாக செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “தாக்குதலுக்கு ஆளான விதவை பெண், பெண் ஒருவரை வளர்த்து வந்துள்ளார். ஆனால், அவருடைய அனுமதியின்றி அந்த வளர்ப்பு பெண்ணுக்கு உறவினர்கள் சிலர் கட்டாய திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த விதவைப் பெண்ணை உறவினர்கள் ஒன்று சேர்ந்து அடித்துள்ளனர். அந்த விதவை பெண்ணின் மகன் போலீசில் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றியுள்ளனர். மேலும் அவரை தாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரைக் கைது செய்திருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. யுஎன்ஐ செய்தி நிறுவனம் கூட இதை வெளியிட்டிருந்தது. 

அசல் பதிவைக் காண: jagran.com I Archive 1 I reporterpost.in I Archive 2

அந்த பெண்ணின் சாதி பற்றிய தகவல் இல்லை. அதே நேரத்தில் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உயர் வகுப்பினர் தாக்கினார்கள் என்று கூறுவதற்கு வழியில்லை.

மேலும் இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது உறுதியாகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் குடும்ப வன்முறை காரணமாக பெண் தாக்கப்பட்ட படத்தை, உ.பி-யில் தலித் பெண் தாக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில்,  நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள பெண் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதும், சாதி பிரச்னை காரணமாக தாக்கப்பட்டார் என்று கூறியிருப்பது தவறான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: உ.பி-யில் சாதி காரணமாக நிகழ்ந்த வன்கொடுமை என்று பரவும் தவறான படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False