வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோசாலையில் பசுக்கள் தாக்கப்பட்டதா?

சர்வதேசம் | International தேசிய அளவில் I National

வங்கதேசம் இஸ்கான் அமைப்பு நடத்தும் பசுக்கள் பாதுகாப்பு அமைப்பான கோ சாலையில் உள்ள பசுக்களை சிலர் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: X Post I Archive

பசுக்களை சிலர் கொடூரமாக தாக்கும் வீடியோ எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை😱

வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை எப்படி நடத்துவார். நாளை நமது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இன்று வங்கதேசம் என்றால் நாளை ???” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்புக்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையமான கோசாலையில் பசுக்களை சிலர் தாக்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். யார் தாக்கினார்கள் என்று நேரடியாக குறிப்பிடவில்லை. மறைமுகமாக அங்குள்ள இஸ்லாமியர்களை குற்றம்சாட்டிப் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்ததா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். பசுக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, பசுக்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பலரை டேக் செய்து பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

Archive

இவற்றுக்கு இடையே, இந்த வீடியோ பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சார்ந்தது என்று குறிப்பிட்டு ஒருவர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த தகவல் அடிப்படையில், ஜலந்தர், பசுக்கள், கொடூர தாக்குதல் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: tribuneindia.com I Archive I punjabkesari.in I Archive

அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் இல்லாமல் tribuneindia.com செய்தி வெளியிட்டிருந்தது. Animal Protection Foundation அளித்திருந்த புகார் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு சில இந்தி, பஞ்சாபி ஊடகங்களிலும் கூட இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

நாம் புகைப்படத்தை வைத்து தேடிய போது Animal Protection Foundation வெளியிட்டிருந்த பதிவுகள் நமக்குக் கிடைத்தது. அதைத் திறந்து பார்த்த போது முதலில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் படி அவர்கள் பதிவு வெளியிட்டிருந்ததையும், ஜலந்தர் காவல் ஆணையருக்கு அளித்திருந்த புகார் மனுவையும் பின்னர் கடைசியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்று அதன் நகலையும் அவர்கள் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் வங்கதேசம் இஸ்கான் அமைப்புக்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

நம்முடைய ஆய்வில் பசுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஜலந்தரில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பசுக்களை தாக்கியவர்கள் மீது ஜலந்தர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜலந்தரில் பசுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோ சாலையில் நடந்தது என்பது போல தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோசாலையில் பசுக்கள் தாக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False