உக்ரைனை நோக்கி ரயிலில் செல்லும் ரஷ்ய ராணுவ தளவாடங்கள் என்று பரவும் பழைய வீடியோ!

சமூக ஊடகம் சர்வதேசம்

உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகள், போர் ஆயுதங்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயிலில் பீரங்கிகள் கொண்டு செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்களும்” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Gtamils Focus என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மார்ச் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய காட்சி என்று பல வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. போர் முணைக்குப் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை ரஷ்யா கொண்டு செல்லும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்ற ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

அதில், மிக அரிய கனடா நாட்டின் ராணுவ ரயில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. ரஷ்யா – உக்ரைன் போர் 2022 பிப்ரவரியில் தொடங்கியது. ஆனால், இந்த வீடியோ 2012ம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோவை எடுத்து, தற்போதைய சூழலுக்கு ஏற்ப தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் ரஷ்யா என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ தளவாடங்களை ரயில் மூலம் கொண்டு செல்லும் ரஷ்யா என்று பகிரப்படும் வீடியோ 2012ம் ஆண்டு கனடாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உக்ரைனை நோக்கி ரயிலில் செல்லும் ரஷ்ய ராணுவ தளவாடங்கள் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False