
அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகளிடம் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், சிறுவன் ஒருவன் முன்பு முட்டிபோட்டு அமர்ந்து பேசும் படம் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன்!” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சோ ராமு என்பவர் 2020 நவம்பர் 11ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை கைது செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, காவலர் ஒருவர் ஜார்ஜை தரையில் படுக்க வைத்து அவரது கழுத்தில் முட்டியை வைத்த அழுத்தி கொலை செய்த காட்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட் மகளைச் சந்தித்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் இருப்பது ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகள்தானா என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது கானானிய நாட்டு இளம் நடிகர் டான் லிட்டில் முன்பு ஜோ பைடன் முழங்கால் இட்டதாக, பலரும் பகிர்ந்து வந்தனர்.
இந்த படத்தை ஜோ பைடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. எனவே, ஜோ பைடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட படத்தைத் தேடி எடுத்தோம். அதில், அவர் படத்திலிருந்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் மகள் என்றோ, டான் லிட்டில் என்றோ எதையும் குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: instagram.com I Archive
குழந்தைகளுக்கு நல்ல சுற்றுச்சூழல், எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று மட்டுமே அதில் கூறியிருந்தார். இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.
எனவே, தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தோம். அப்போது டெட்ராய்ட் ஃப்ரீ ப்ரஸ் என்ற செய்தி இணையதளத்தில் இது தொடர்புடைய புகைப்படம் பகிரப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், டெட்ராய்டில் பிரசாரம் செய்ய வந்த ஜோ பிடன் ஷாப்பிங் செய்தார். அப்போது கடை உரிமையாளரின் மகனிடம் பேசினார் என்று கூறப்பட்டிருந்தது. இரண்டு படத்திலும் இருப்பது ஒரே குழந்தை என்பது தெரிந்தது. மேலும் இந்த புகைப்படத்தை கெட்டி இமேஜஸ் தளமும் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: freep.com I Archive 1 I gettyimages.in I Archive 2
இருப்பினும் நாம் தேடும் அசல் படம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது wxyz.com என்ற தளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. ஏபி இமேஜஸ் தளத்தில் இந்த புகைப்படம் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே, ஏபி இமேஜஸ் தளத்தில் தேடினோம். அதில், இந்த புகைப்படம் 2020 செப்டம்பர் 9 அன்று டெட்ராய்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: wxyz.com I Archive 1 I apimages.com I Archive 2
அதில், “டெமாக்ரடிக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடன் த்ரீ தேர்ட்டீன் கடைக்கு சென்றார். அங்கு கடை உரிமையாளரின் பேரனிடம் உரையாடினார். ஜோ பிடன் தேர்தல் பிரசாரத்துக்காக மிட்ஷிகன் வந்திருந்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலமாக, இந்த சிறுவன், போலீசாரால் கழுத்தை மிதித்து கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகள் இல்லை என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: abcnews.go.com I Archive
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகள் எப்படி இருப்பார் என்று பார்த்தோம். அவர் அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு போரினார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ டைபன் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜார்ஜ் ஃப்ளாய்ட் மகளிடம் ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
