
ஃபேஸ்புக்கில், தமிழனின் கட்டிடக்கலையின் அழகு என்று கூறி ஒரு புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழனின் கட்டிட கலையின் அழகை பிடித்தவர்கள் #ஷேர்பண்ணுங்க….
தமிழனின் கட்டிடக்கலையின் அழகைப் பிடித்தவர்கள் ஷேர் செய்யுங்கள் என்று கூறி மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அழகிய கோவிலின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கோவிலின் பெயர், எங்கே உள்ளது என்று எந்த ஒரு தகவலும் இந்த பதிவில் இல்லை.
கீர்த்தி சூரேஷ் என்ற நபர் இந்த பதிவைப் பகிர்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்துடன் இந்த ப்ரொஃபைல் உள்ளது. இதனால், இந்த பதிவு உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த படம் பகிரப்பட்டுள்ளது. படம் பார்க்க மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே, எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் போல தெரிந்தது. இதை உறுதி செய்ய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.


அப்போது, இது எல்லோரா என்பது உறுதியானது. மேலும், தேடலில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள படம் நமக்கு முதல் படமாகக் கிடைத்தது. அந்த படத்தை கிளிக் செய்து அதன் இணைய தளத்துக்குச் சென்றோம். அது, ghaziabad.locanto.net இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு படங்களும் ஒன்று என்பது உறுதியானது.
கைலாசநாதர் ஆலயத்தின் பின்னணி என்ன என்று ஆய்வு செய்தோம். இந்த கோவில் ராஷ்டிரகூடர் ஆட்சிக்காலத்தில் முதலாம் கிருஷ்ணன் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தின் தாக்கம் இந்த கோவிலில் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பல்லவர்களை வெற்றிகொண்ட சாளுக்கியர்கள் பல்லவ கைவினைக் கலைஞர்களை அழைத்துச் சென்று கர்நாடகாவில் உள்ள பட்டடக்கல் என்ற இடத்தில் உள்ள விருப்பாஷா என்ற கோவிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. சாளுக்கியர்களை வெற்றிகொண்ட ராஷ்டிரகூடர்கள் பட்டடக்கலில் இருந்த கலைஞர்களை அதாவது பல்லவ கலைஞர்கள் உள்பட அனைவரையும் அழைத்துச் சென்று எல்லோரா கோவிலைக் கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் ஆலயம் என்பது பல்லவ – சாளுக்கிய, ராஷ்டிரகூட வடிவமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பல்லவ கட்டிடக்கலையின் தாக்கம் இருந்தாலும் இந்த கோவிலை முழுமையாக தமிழரின் கட்டிடக்கலை என்று கூற முடியாது.
இந்த பதிவை வெளியிட்ட கீர்த்தி சூரேஷ் பின்னணியை ஆய்வு செய்தோம். இது நடிகை கீர்த்தி சுரேஷின் முகநூல் பக்கம் இல்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட போலி என்று தெரிந்தது. அதனால்தான் பிரச்னை வராமல் இருக்க சுரேஷ் என்பது சூரேஷ் என்று மாற்றியுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீர்த்தி சுரேஷ் படத்துடன் கீர்த்தி சூரேஷ் என்ற பெயருடன் உள்ள இந்த ஃபேஸ்புக் பக்கம் லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது. “எல்லோரா கைலாசநாதர் ஆலயம், பல்லவ தாக்கத்தால் வடிவமைக்கப்பட்டது” என்று சொல்லியிருந்தாலே அதிக லைக்ஸ் வாங்கியிருக்கலாம். ஆனால், எதையும் ஆய்வு செய்யாமல் இந்த பதிவை வெளியிட்டுள்ளது தெரிகிறது.
நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஷ்டிரகூடர்கள் காலத்தில் கட்டப்பட்ட எல்லோரா கைலாசநாதர் கோவில். இதைக் கட்டியது ராஷ்டிரகூடர்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
