ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி
ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதேபோல், ஜாய் ஆலூக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் விஜய் நடித்திருந்ததால் அவரையும் இதில் இணைத்து சிலர் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விஜய் படத்துடன் Suraa Suresh என்பவர் பகிர்ந்துள்ள பதிவில், "தற்கொலை செய்த கொண்ட ஜாய் ஆலுக்காஸ் அதிபரின் கடைக்கு விளம்பர தூதர் அண்ணன் #ஜோசப்_விஜய் னு எத்தன பேருக்கு தெரியும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். பலரும் இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். எனவே, ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
பெட்ரோலியம் தொடர்பான தொழிலை மேற்கொண்டுவந்த தொழிலதிபர் ஜாய் அரக்கல் மரணம் அடைந்தார் என்று செய்திகள் வெளியானது. இதன் அடிப்படையில் ஜாய் ஆலூக்காஸ் உரிமையாளர் இறந்துவிட்டார் என்று முதலில் வதந்தி பரவியது. இறந்தவர் ஜாய் ஆலூக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இல்லை என்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து வதந்திகள் அகற்றப்பட்டன.
ஆனால், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பலரும் வதந்தி பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே, இது பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலில் துபாயில் தற்கொலை செய்துகொண்ட ஜாய் அரக்கல் தான் ஜாய் ஆலூக்காஸ் நகைக் கடைகளின் உரிமையாளராக, இது தொடர்பாக வெளியான செய்திகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்த்தோம். விகடனில் வெளியான செய்தியில். "ஜாய் அரக்கல் துபாயில் அக்கவுண்டன்டாகப் பணியைத் தொடங்கி, இன்னோவா குரூப் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் என பல துறைகளில் செயல்பட்டு வந்துள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.
ஜாய் ஆலூக்காஸ் நிறுவனம் இது பற்றி என்ன கூறுகிறது என்று அதன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது அதில், "திரு ஜாய் ஆலூக்காஸ் பற்றிய வதந்தி பரவி வருகிறது, இந்த நேரத்தில் அவருடைய உடல் நலம் ஆரோக்கியமாக உள்ளது என்பதை ஜாய் ஆலூக்காஸ் நிறுவனம் உறுதி செய்கிறது.
குழப்பம் காரணமாக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாய் அரக்கல் மரணத்தையும் ஜாய் ஆலூக்காஸையும் தொடர்புப்படுத்தி செய்திகள் பரவி வருகின்றன. திரு ஜாய் அரக்கல்லுக்கும் ஜாய் ஆலூகாஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த நேரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஜாய் ஆலூக்காஸ் இரங்கலும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் ஜாய் என்ற ஒரே ஒரு முதல் பெயரை வைத்துக்கொண்டு இறந்தது ஜாய் ஆலூக்காஸ் உரிமையாளர் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஜாய் ஆலூக்காஸ் உரிமையாளர் இறந்துவிட்டதாக பகிரப்படும் தகவல் அனைத்தும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False