நிர்மலா சீதாராமனுக்கு கமல்ஹாசன் பதிலடி: உண்மை என்ன?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu தவறாக வழிநடத்துபவை I Misleading

தமிழ் படித்தால் யாசகம் கூட எடுக்க முடியாது என்று கூறிய நிர்மலா சீதாராமனுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் நிர்மலா சீதாராமன் அப்படிக் கூறியிருந்தாரா… உண்மை என்ன என்று அறிய ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிதியமைச்சருக்கு கமல்ஹாசன் பதிலடி தமிழ் யாசகம் எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் யாசகம் எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் யாசகத்தை ஏற்கவே மாட்டான். தமிழ் படித்தால் யாசகம் கூட எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையிலேயே பதிலடி கொடுத்த எம்.பி. கமல்ஹாசன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது தமிழ் யாசகம் எடுக்க உதவாது என்று கூறியிருந்தார். இதை, தமிழ் படித்தால் யாசகம் கூட எடுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்குப் பதிலடி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உண்மையில் இதை அந்த ஊடகம்தான் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கத்தை பார்த்தோம். அதில் அந்த நியூஸ் கார்டு இருந்தது. இதன் மூலம் நியூஸ் கார்டு உண்மையானது என்பது உறுதியானது.

Archive

நிர்மலா சீதாராமன் உண்மையில் அப்படி எப்போதுமே கூறியது இல்லை. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்பது தமிழ் ஓரளவு தெரிந்தவர்களுக்கு கூட தெரியும், அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று தமிழ்நாட்டின் ஒரு பெரிய தலைவர் (தந்தை பெரியார்) கூறியதாக விடுதலையில் வெளியானது என்று குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதை நிர்மலா சீதாராமனின் சொந்த கருத்து என்பது போல் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 

தற்போது மீண்டும் அந்த பிரச்னை எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் கூறியதாக ஊடகமே செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, மீண்டும் ஒரு முறை நிர்மலா சீதாராமன் என்ன பேசினார் என்பதை விரிவாகக் கட்டுரையாக வெளியிட முடிவு செய்தோம். நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சு Sansad TV யூடியூப் பக்கத்தில் 2025 மார்ச் 11ம் தேதி வெளியாகி இருந்தது. வீடியோவின் 1 மணி 9வது நிமிடத்தில் அந்த குறிப்பிட்ட பகுதி வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய ஒரு வார்த்தைக்கு அவரை அந்த வார்த்தையை திரும்பப் பெற வைத்தனர். ஆனால், ஒரு பெரிய தலைவர் ஒருவர் தமிழ் பற்றி பேசிய பேச்சைக் கேளுங்கள். அவரது பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட அந்த பத்தியை படிக்க விரும்புகிறேன். ஓரளவுக்கு தமிழ் பற்றி தெரிந்திருந்தால் கூட யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது புரியும். 

இந்த நபர் தமிழ் பற்றி பேசும் போது, எந்த எதிர்ப்பும் வராது. அவர் எங்களின் திராவிட அடையாளம் என்றெல்லாம் கூறுவார்கள். அவர் சொல்கிறார்… இது விடுதலை என்ற இதழில் 27 நவம்பர் 1943ல் வெளியாகி உள்ளது. அவர் சொல்கிறார், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” இந்த ஒரு வரியே போதுமானது சார். இருப்பினும் நான் தொடர்ந்து படிக்கிறேன். “தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர வேற உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் பாடியுள்ளார்” என்று கூறுகிறார்.

இதன் மூலம் இந்த கருத்து நிர்மலா சீதாராமனுடையது இல்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டின் மறைந்த தலைவர் ஒருவர் கூறியது என்று மிகத் தெளிவாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்ற பகுதியை மட்டும் வைத்து நிர்மலா சீதாராமன் தமிழை இழிவுபடுத்திவிட்டார் என்று தவறாக பதிவிட்டுள்ளனர். 

நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். நிர்மலா சீதாராமன் அப்படிக் கூறவில்லை என்ற நிலையில் அந்த கருத்துக்காக அவருக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

முடிவு:

தமிழ் படித்தால் யாசகம் கூட எடுக்க முடியாது என்று தமிழ்நாட்டின் பெரிய தலைவர் ஒருவர் (தந்தை பெரியார்) கூறியதாக விடுதலை இதழை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் கூறியதை நிர்மலா சீதாராமனின் சொந்த கருத்து போல தவறாக பலரும் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:நிர்மலா சீதாராமனுக்கு கமல்ஹாசன் பதிலடி: உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading

Leave a Reply