
அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “முதலமைச்சர் வேட்பாளர் – எல்.முருகன் கருத்து. அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் – பாஜக தமிழக தலைவர், எல்.முருகன்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர். பாஜக-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்திருந்தது. தற்போது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பழைய தகவலை எல்லாம் புதிது போல பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி சரியாகத் தெரியவில்லை. ஆனால், பாஜக தமிழக தலைவர் எல் முருகன் என்று தெளிவாக உள்ளது. இதன் மூலம் இது பழைய நியூஸ் கார்டு என்பது தெரிகிறது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
இந்த தகவலை அப்படியே கூகுளில் பதிவிட்டு தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக அப்போதிருந்த எல்.முருகன் இந்த கருத்தைக் கூறியிருந்தது உண்மைதான் என்பது தெளிவானது. ஆனால் இந்த கருத்து இப்போதைய அரசியல் சூழலுக்குப் பொருந்தாது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று அமித்ஷாவே அறிவித்துவிட்டார். எனவே, பழைய செய்தியை புதிது போல் பரப்பி கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டிருப்பது தெளிவாகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு உண்மைதான். ஆனால் புதிது இல்லை. 2020ம் ஆண்டு வௌியான நியூஸ் கார்டு இது. பழைய நியூஸ் கார்டு என்பதை மறைத்து புதிதாக அறிவிப்பு வெளியிட்டது போல் வதந்தி பரப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது தெளிவாகிறது.
முடிவு:
எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த போது 2020ம் ஆண்டு அளித்த பேட்டியை புதிது போல சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறினாரா?
Written By: Chendur PandianResult: Misleading
