இந்துக்களை விரட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Kamalnath 2.png

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இஸ்லாமியர்களுடன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்துக்களை விரட்டுவோம், தேர்தல் வரை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்; ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்."*

மூடிய அறையில் முஸ்லிம்களுடன் ரகசிய சந்திப்பு... *முஸ்லீம் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் விளக்கம்".*

துரோகி காங்கிரசை அடையாளம் காணுங்கள். இவர்களை முற்றிலுமாக அழித்து விடுங்கள். சனாதன கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் காங்கிரஸ் தேச விரோதிகள். 😡

*இந்த காணொளியை முடிந்தவரை ஷேர் செய்யவும்.* காங்கிரஸின் தனித்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான கமல்நாத் இந்துக்களை விரட்டுவோம் என்று கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். கமல்நாத்தே இந்து தான்... அப்படி இருக்கும் போது இந்துக்களை எப்படி அவர் விரட்ட வேண்டும் என்று பேசியிருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்தோம்.

கமல்நாத் இந்தியில் பேசுவதால் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை. இந்த வீடியோ உண்மையா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இதே வீடியோவுடன் TIMES NOW வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு நமக்குக் கிடைத்தது.

Archive

கமல்நாத் பேசியதை அவர்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து பதிவிட்டிருந்தனர். அதில், "ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஆர்எஸ்எஸ் நபர்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர்கள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளார்கள். சிந்த்வாரா (Chhindwara) பற்றிப் பேசினால், மக்கள் என்னிடம் வந்து கூறுகிறார்கள். சிந்த்வாரா என்பது நாக்பூருக்கு அருகில் இருப்பதால் அவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. காலையில் வந்துவிட்டு இரவில் திரும்பிவிடுகிறார்கள்.

இவர்கள் இரண்டே வரிகளைத் திரும்பக் திரும்ப கூறுகிறார்கள். இந்து-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள்... முஸ்லிமுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று பொது மக்களிடம் பிரசாரம் செய்கிறார்கள். இதுதான் அவர்கள் யுக்தி. எனவே, நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் உங்களை தூண்ட முயல்வார்கள். அவர்களை நாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்... தேர்தல் நாள் வரை நீங்கள் அவற்றைத் தாங்கிக்கொள்ள வேண்டும்" என்று கமல்நாத் பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். இதில் எதுவும் தவறான கருத்து இருப்பது போல் தெரியவில்லை.

கமல்நாத் பேசிய ஆடியோ தொடர்பாக இந்தி தெரிந்த நண்பர்களின் உதவியை நாடினோம். இந்துக்களை விரட்ட வேண்டும் என்பது போல் கமல்நாத் அதில் பேசியுள்ளாரா என்று கேட்டோம். அவர்களும் டைம்ஸ் நவ் வெளியிட்ட பதிவில் உள்ளது போன்ற மொழிமாற்றத்தையே நமக்கு அளித்தனர். இந்துக்களுக்கு விரோதமாக அவர் பேசவில்லை என்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து நம்முடைய தேடலில், இந்த வீடியோ தொடர்பாக கமல்நாத் அளித்த விளக்கமும் நமக்குக் கிடைத்தது. இந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முந்தையது என்று 2018 நவம்பரில் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 14, 2018ல் கமல்நாத் பேட்டியை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. அதில் கமல்நாத் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக கமல்நாத்திடம் கேட்டபோது அவர், "நான் என்ன தவறாக பேசினேன்? குற்றம் சாட்டும் வகையில் அந்த வீடியோவில் நான் என்ன சொன்னேன்?

தங்களின் சொந்த நலனுக்காக சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் நபர்களிடம் கவனமாக இருங்கள், அவர்கள் உண்மையான பிரச்னையில் இருந்து சமூகத்தின் கவனத்தைத் திருப்ப, பிளவுபடுத்த முயல்வார்கள். அத்தகைய நபர்களிடம் கவனமாக இருங்கள் என்று கூறினேன். இப்படி பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் வெற்றியடையக் காங்கிரஸ் கட்சி விடாது என்று கூறினேன். நம்முடைய சமூக நல்லிணக்கம் தொடரும்... இந்த கருத்தை நான் சந்திக்கும் ஒவ்வொரு சமூக குழுவிடமும் கூறிக்கொண்டுதான் இருக்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்துக்களை விரட்டுவோம் என்று கமல்நாத் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.

Kamalnath 3.png

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயல்வார்கள், அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று இஸ்லாமியர்களிடம் கமல்நாத் பேசிய வீடியோவை எடுத்து, இந்துக்களை விரட்டுவோம் என்று கூறியதாக தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியுள்ளது தெளிவாகிறது. நமக்கு இந்தி மொழி தெரியாது என்பதை சாதகமாக வைத்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்துக்களை விரட்டுவோம் என்று இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கமல்நாத் கூறியதாக பரவும் தகவல் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்துக்களை விரட்டுவோம் என்று கமல்நாத் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False