இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

இந்து கோவில்களிலிருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை மீண்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “கோயில்களில் இருந்து ரூ.445 கோடி வரி வசூல் ரூ.330 கோடி மசூதி, சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “445 கோடி கோயில் உண்டியல் பணத்தை சர்ச்சு மசூதி கட்டுவதற்கு நிதி அளித்தியுள்ளது திமுக அரசு😡 பல்லாயிரம் கோடி

கோயில் உண்டில் பணம் எங்கே போகுது…? நீங்கள் உண்டியலில் போடும் பணம்தான், தமிழ்நாட்டின் வழிபாட்டையும், கோயில்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்…? 

தயவு செய்து கோயில் உண்டியலில் பணம் போட வேண்டாம் ..🙏 ஏனென்றால் நீங்கள் கோயில் உண்டியலில் போடும் பணம் நேரடியாக திருட்டு திராவிட கும்பளுக்கு போகிறது, கோயிலில் பூஜை செய்யும் அர்சகரின் தட்டில் பணத்தை போடுங்க தயவுசெய்து… ஒரு பூசாரியால் ஒரு கோயில் அழிந்ததாக வரலாறு இல்லை, அவர் தட்டில் போடும் பணம் அந்த கோயிலை சிறப்பாக பார்த்துக்கொள்ள ஊக்குவிக்கும், பூசாரிக்கு வருமானம் அதிகரித்தால், கோயிலை நன்றாக பார்த்துக் கொள்வான், கோவிலின் மீதான அக்கறை கூடும், கோவிலை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்க மாட்டான், கோவிலை கட்டியது நம் தமிழ் முன்னோர்கள் தான், ஆனால் அதை பூஜை செய்து பாதுகாத்து வருவது பூசாரிகள் தான், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலை துறை மீட்ட கோயில்கள் எத்தனை …? சீரமைத்த கோயில்கள் எத்தனை, ஒன்னும் இல்ல, ஆனால் நம் கண் முன்னே எத்தனை வீடியோக்களை நாம் காண்கிறோம் நம் தமிழ் கோயில்கள் இடிக்கப்படுவதை… நம் கோயிலை இழப்பது என்பது, நம் வலது கால் கையை இழப்பதற்கு சமம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தமிழ் நாடு பட்ஜெட் மார்ச் 14, 2025 அன்று தான் தாக்கல் செய்யப்படவே உள்ளது. அதற்குள்ளாக எதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கோவில்களிலிருந்து வரியாகப் பெற்ற பணத்தை மசூதி, சர்ச் கட்ட ஒதுக்கியது என்று தெரியவில்லையே என்று குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை 2024ல் இப்படி ஏதேனும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தெரிந்துகொள்ள ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள தலைப்பை அப்படியே டைப் செய்து தேடிய போது, அது தொடர்பாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அந்த செய்தியை சற்று பெரிது செய்து பார்த்த போது, “கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை உறுதி செய்வது போல், இந்து கோயில்களுக்கு சித்தராமையா அரசு புது வரி விதித்துள்ளது” என்று இருந்தது. 

இதன் மூலம் இந்த செய்தி தமிழ்நாட்டைச் சார்ந்ததது இல்லை என்பது தெளிவானது. கர்நாடகா தொடர்பான செய்தியை எடுத்து தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கோவில் பணத்தை வேறு மதத்தினர் மேம்பாட்டுக்காக செலவழித்தது என்று தவறான செய்தியைப் பரப்பியிருப்பது தெளிவானது.

தொடர்ந்து அந்த படித்த போது “ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்களுக்கு 5 சதவிகிதமும், ஒரு கோடிக்கு மேல் வருமானம் வரும் கோவில்களுக்கு 10 சதவிகிதமும் வரி விதிக்க மசோதோ கொண்டு வரப்பட்டது. ஆனால், இதற்கு கையெழுத்திட ஆளுநர் மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டனர். 

அதற்கு அடுத்த பத்தியே குழப்பும் வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் கோயில்களுக்கு விதிக்கப்பட்ட வரி மூலம் ரூ.445 கோடி கிடைத்துள்ளது. இதிலிருந்து சிறுபான்மையினர் நிறுவனங்களுக்கு ரூ.330 கோடி செலவு செய்யப்பட்டது. வக்ஃப் சொத்து மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி, பெங்களூர் ஹஜ் பயனுக்காக ரூ.10 கோடி, யாத்திரிகர் தங்கும் இடத்துக்காக ரூ.10 கோடி. கிறிஸ்தவர் சமூகத்துக்காக ரூ.200 கோடி வழங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிஎன்என் நியூஸ் சேனல் பெற்று அம்பலப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

புதிதாக வரி விதிக்க மசோதா கொண்டு வந்தார்கள் என்றால் எப்படி அதற்குள்ளாக வரி வசூலித்தார்கள் என்று கேள்வி எழுந்தது. மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுத்துவிட்ட சூழலில் எப்படி ஓராண்டுக்கு முன்பாக இருந்து வரி வசூலித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் முழுக்க முழுக்க ஒரு தரப்பினரை தூண்டி விடும் வகையிலேயே செய்தி எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்தோம்.

அப்போது இது தொடர்பாக கர்நாடக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அளித்த பதில் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், “உண்மையில் பாஜக தான் இந்து விரோத கட்சி. இது புதிதாக கொண்டுவரப்படும் வரி மசோதா இல்லை. திருத்தம் மட்டுமே. தற்போது 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் கோவில்களுக்கு 10 சதவிகித வரி உள்ளது. கடந்த பாஜக ஆட்சியிலும் இந்த வரி வசூலிக்கப்பட்டது. தற்போது அதை ஒரு கோடி வரை வரி வருவாய் உள்ள கோவில்களுக்கு 5 சதவிகிதமாக குறைத்துள்ளோம். உண்மையில் சிறிய கோவில்களுக்கு நாங்கள் நன்மையே செய்துள்ளோம்” என்று கூறினார். மேலும் இந்த வரி வருவாய் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சி கிரேடு நிலையில் உள்ள ஏராளமான சிறிய கோவில்களுக்கு உதவிகள் செய்ய உள்ளோம். இதை பாஜக தடுக்கிறது” என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் பழமையான கோயில் பராமரிப்புக்கு என்று கடந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கியது. அதே போல் பழமையான மசூதி, தேவாலயம் புனரமைப்புக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கியது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதில் இந்து கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2024-25 பட்ஜெட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 1290 கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 11 கோவில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 6071 ஏக்கர் நிலம், 2534 லட்சம் சதுர அடி மனைகளும், 504 லட்சம் சதுர அடி கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளது. 143 கோவில் திருக்குளங்களைச் சீரமைக்க 84 கோடி செலவிடப்பட்டது என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. 

வரியை குறைத்தார்களா, கூட்டினார்களா என்பது பற்றிய ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த வரி விதிப்பு வருவாய், பிற மதத்தினருக்கு ஒதுக்கியது எல்லாம் தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் நடந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம். நம்முடைய ஆய்வில் இந்த செய்தி கர்நாடகத்தை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு விஷமத்தனமானது என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்து கோவில்களில் இருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடகாவில் இந்து கோவில்களில் இருந்து ரூ.445 கோடி எடுத்து ரூ.330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த காங்கிரஸ் அரசு என்று பரவிய செய்தியை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

Written By: Chendur Pandian 

Result: False