
நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் அக்டோபர் 11, 2021 அன்று நீக்கப்பட்டார் என்று ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நாம் தமிழர் கட்சி வெளியிட்டது போன்ற அறிவிப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், அ.துரைமுருகன் என்பவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று இருந்தது.
நிலைத் தகவலில், “மேடையிலேயே சாட்டை முருகனைக் கண்டிக்கவேண்டியது தானே சீமான்?
எத்தனை முறை சாட்டை முருகனை கட்சியை நீக்குவீர்? எத்தனை முறை திரும்ப திரும்ப சேர்ப்பீர்? நாடக அரசியல்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை தமிழ்சிவா என்பவர் திமுக இணையதள நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 அக்டோபர் 11ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று சீமான் அறிவித்ததாக ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகத்தான் சாட்டை முருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட சூழலில் அவர் மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
நாம் தமிழர் கட்சி எல்லா அறிக்கை, அறிவிப்பையும் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் மற்றும் தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிடும். அதன் அடிப்படையில் 2021 அக்டோபர் 11ம் தேதி சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியானதா என்று பார்த்தோம். ஆனால் அதில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கை இருந்தது.
அதில், “கன்னியாகுமரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டிக்கிறோம். சாட்டை துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம்” என்று இருந்தது. இதன் மூலம் சாட்டை துரைமுருகன் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பகிரப்படும் அறிவிப்பு போலியானது என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: naamtamilar.org I Archive
அதே நேரத்தில் விகடன் உள்ளிட்ட சில ஊடகங்களிலும் இந்த அறிக்கை போலியானது என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், சாட்டை துரைமுருகன் 2021 மார்ச் மாதமே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் என்று அக்கட்சியினர் தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
இதன் மூலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் அவதூறாக மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று பகிரப்படும் அறிவிப்பு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சாட்டை துரைமுருகன் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போன்று பகிரப்படும் அறிவிப்பு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டதாகப் பரவும் போலியான அறிக்கை!
Fact Check By: Chendur PandianResult: False
