
சிலர் மன்னார்குடி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்குள்ள விமான நிலையம் என்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த ஊரின் விமானநிலையம் என்பதை அறிய ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கழுகு பார்வையில் மன்னார்குடி விமான நிலையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே புகைப்படத்தை சிலர் “கழுகு பார்வையில் புதுக்கோட்டை மாநகராட்சி விமான நிலையம்” என்றும், வேறு சிலர் “கழுகு பார்வையில் எங்கள் ஊர் கிருஷ்ணகிரி விமான நிலையம்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
வெளிநாட்டின், வெளி மாநிலத்தின் ஒரு பகுதியின் புகைப்படத்தை எடுத்து அதை தமிழ்நாட்டில் தங்கள் பகுதியின் புகைப்படம் என்று லைக்ஸ்-க்காக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்போது ஒரு விமான நிலையத்தின் புகைப்படத்தை தங்கள் ஊரின் விமான நிலையம் என்று மன்னார்குடி, நன்னிலம், கிருஷ்ணகிரி, அரியலூர், புதுக்கோட்டை என பல பகுதிகளைச் சார்ந்தவர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் ஒருவர் இந்த புகைப்படத்தை நையாண்டிக்காக மன்னார்குடி விமானநிலையம் என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவை யாரும் நம்பவில்லை என்பதை அந்த பதிவில் வெளியான கமெண்ட்டை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இந்த புகைப்படத்தை மன்னார்குடி விமானநிலையம் என்று குறிப்பிட்டு வேறு சிலரும் பதிவிடத் தொடங்கியுள்ளனர். இதை பார்க்கும் போது இந்த பதிவு தவறானது என்பது புரியாமல் கூட சிலர் இருக்கலாம் என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த பதிவை மக்கள் நம்புகிறார்களா, இல்லையா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த புகைப்படம் எந்த ஊரின் விமானநிலையம் என்பதை அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமானநிலையத்தின் புகைப்படம் என்று குறிப்பிட்டு பலரும் பல ஆண்டுகளாக இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive
செய்தி ஊடகம் ஒன்றிலும் கூட அழகான விமானநிலையங்கள் என்று குறிப்பிட்டு இந்த விமானநிலைய புகைப்படத்தை கோழிக்கோடு விமானநிலையம் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை உறுதிசெய்துகொள்ளக் கூகுள் மேப்-ல் கோழிக்கோடு விமானநிலையத்தின் முழு காட்சியையும் எடுத்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்த காட்சியும் கோழிக்கோடு விமானநிலையத்தின் அமைப்பும் ஒத்துப்போகிறது. இதன் அடிப்படையில் கோழிக்கோடு விமானநிலையத்தின் புகைப்படத்தை எடுத்து தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
முடிவு:
கோழிக்கோடு விமானநிலையத்தின் புகைப்படத்தை விஷமத்தனமாக மன்னார்குடி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, அரியலூரில் உள்ள விமானநிலையம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title: மன்னார்குடி, புதுக்கோட்டை விமான நிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
