பாலஸ்தீன மக்களை தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்ததா எகிப்து?
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க எகிப்து 36 அடி உயர முள் வேலியை அமைதித்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மிக உயரமான மதில் சுவரை தாண்டிக் குதிக்க ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "100% முஸ்லீம் நாடான எகிப்து, காஸாவிலிருந்து முஸ்லிம்கள் தனது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்தது. இப்போது காஸா முஸ்லிம்கள் உயரமான வேலியைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். இது முஸ்லிம் உலகின் மிகப் பெரிய போலித்தனம். எந்த முஸ்லீம் அகதிகளும் தங்கள் எல்லைக்குள் நுழைவதை அவர்கள் விரும்பவில்லை. மறுபுறம், முஸ்லிம் அல்லாத நாடுகள் தங்களை இருகரம் நீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த முஸ்லிம் நாடுகள் எதிர்பார்க்கின்றன. இது பூகோள அரசியல் ஜிஹாத்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Jaya Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 18ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூண்டது. இந்த நிலையில் உயிரைக் காக்க பாலஸ்தீனியர்கள் எகிப்துக்குள் ஊடுருவ முயற்சி செய்வதாகவும் அவர்களைத் தடுக்க எகிப்து 36 அடி உயரத்துக்குத் தடுப்புச் சுவரை எழுப்பியதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி
தேடினோம். அப்போது, இந்த 2021ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வந்த வீடியோ ஒன்றில் இந்த காட்சி இடம் பெற்றிருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 2023 அக்டோபரில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, அந்த வீடியோ தொடர்பாக தேடிய போது, 2021ல் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் ஏற்பட்ட போது, பாலஸ்தீனத்துக்கு உதவ லெபனான் மக்கள் இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயற்சி செய்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் பாலஸ்தீனியர்கள் எகிப்துக்குள் ஊடுருவ முயன்றனர் என்று பகிரப்பட்டுள்ள தகவலும் தவறானது என்பது உறுதியாகிறது.
2021ம் ஆண்டு பாலஸ்தீனத்துக்கு உதவ லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற லெபனான் மக்களின் புகைப்படத்தை இப்போது எகிப்துக்குள் ஊடுருவ முயன்ற பாலஸ்தீனிய இஸ்லாமியர்கள் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2021ல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற லெபனான் மக்களின் புகைப்படத்தை எகிப்துக்கு தப்பி ஓட முயலும் இஸ்லாமியர்களை தடுக்கும் எகிப்து என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பாலஸ்தீன மக்களை தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்ததா எகிப்து?
Written By: Chendur PandianResult: False