பட்டாசு சத்தம் கேட்டு ஓட்டம் பிடித்த சௌதி அமைச்சர் என பரவும் வதந்தி!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

சௌதி அரேபியாவில் சீன தூதரகத்தில் பட்டாசு வெடித்ததைத் தாக்குதல் என கருதி சௌதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தப்பி ஓடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அரபு உடை அணிந்த நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரை மற்றொரு அரேபியர் வரவேற்கிறார். திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. உடனடியாக அவர் காரில் ஏறி தப்பிக்கிறார். தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம், குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்கிறது.

நிலைத் தகவலில், சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வந்தார். அவரை வரவேற்க பட்டாசு வெடிக்கும் என்று சவுதி அரேபிய அமைச்சருக்கோ அல்லது அவரது ஊழியர்களுக்கோ தெரிவிக்க சீனர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. வேடிக்கை பாருங்கள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பதிவை Karthigai Selvam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

சௌதி அரேபியாவில் உள்ள சீன தூதரகத்துக்கு சௌதி அரேபியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் சென்றால் அவரை சீன அதிகாரிகள்தான் வரவேற்பார்கள். ஆனால், சுற்றிலும் அரேபியர்களாக உள்ளனர். சௌதி அரேபியா போன்ற நாடுகளில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு வெடிக்க முடியாது. அப்படி இருக்கும் போது சீன தூதரகம் இப்படி ஒரு தவரை செய்ய வாய்ப்பு இல்லை. 

மேலும், பட்டாசு வெடித்தது போன்று சத்தம் இல்லை. துப்பாக்கிச் சூடு நடந்தது போன்று சத்தம் கேட்கிறது. தரையில் ஒருவர் விழுந்து கிடக்கிறார்.  வெறும் பட்டாசு வெடித்தது என்றால் ஒருவர் தரையில் விழுந்து கிடக்கத் தேவையில்லை. ஆனால், சுற்றிலும் உள்ள மக்கள் யாரும் பயப்படவில்லை. அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கின்றனர். காரில் இருந்து வந்தவர் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமே பரபரப்பாக உள்ளனர். இவை எல்லாம் இந்த வீடியோவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே, இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. குவைத் அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி, எமிரேட்ஸ் பிரமுகர் வரவேற்பு என்று எல்லாம் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து தேடிய போது Emiri Guards-ன் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை என்று சில வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. Emiri Guards என்றால் எந்த நாட்டைக் குறிக்கும் என்று தேடிய போது கத்தார் என்று தகவல் கிடைத்தது. 

இது குழப்பத்தை அதிகரிக்கவே, சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது ஏ.எஃப்.பி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் இந்த வீடியோ தொடர்பாக ஃபேக்ட் செக் செய்திருப்பது தெரிந்தது. இது குவைத்தில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், அந்த செய்தியில் அரபு ஊடகம் ஒன்றின் ட்வீட் பதிவையும் வெளியிட்டிருந்தனர். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சி (மறுபக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ) இருந்தது. வளைகுடா பாதுகாப்பு கண்காட்சியில் பாதுகாப்பு ஒத்திகை என்று குறிப்பிட்டிருந்தனர். 

Archive

வீடியோவை பார்த்தோம்… காரில் இருந்து இறங்கும் நபரை மற்றொருவர் வரவேற்கிறார். திடீரென்று அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. அதை பாதுகாப்பு வீரர்கள் எப்படி தடுத்தார்கள், முக்கிய பிரமுகரை எப்படிக் காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பினார்கள் என்று காட்டப்பட்டது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் இந்த கட்டுரை வெளியாகி இருந்தது. 

வளைகுடா நாடுகளில் நடந்த பாதுகாப்பு பயிற்சியின் வீடியோவை எடுத்துவந்து, சௌதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பட்டாசு சத்தம் கேட்டு பயந்து ஓடினார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பட்டாசு வெடித்ததை தாக்குதல் என தவறாக கருதி சௌதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தப்பி ஓடினார் என்று பரவும் வீடியோ குவைத்தில் நடந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பட்டாசு சத்தம் கேட்டு ஓட்டம் பிடித்த சௌதி அமைச்சர் என பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False