மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட தார் சாலை என்று பரவும் படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெரு ஒன்றில் ஒரு சிறிய பகுதி மட்டும் தார் சாலை அமைத்து, வெள்ளை பெயிண்ட் கோடு போடப்பட்டுள்ள படத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். பின்னணியில் ஸ்டாலின்தா வராரு என்ற தி.மு.க தேர்தல் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “திருட்டு திராவிடத்தின் விடியலோ வடியல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sorimuthu Rcpm என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் வேலூரில் பைக்கை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, நாமக்கல்லில் அடிபம்ப்பை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் தெரு ஒன்றில் ஒரு சில மீட்டர் தூரத்துக்கு மட்டும் தார் சாலை அமைத்து அதன் இரு புறத்திலும் வெள்ளை நிற கோடு போட்டுள்ளனர் என்று ஒரு புகைப்படத்தை சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால், இந்த சாலை தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்பட்டது, எப்போது அமைக்கப்பட்டது என்ற தகவலை அளிக்காமல், விடியல் ஆட்சியில் என்று குறிப்பிட்டிருந்தனர். எந்த ஒரு தகவலும் இன்றி புகைப்படம் ஆயிரக் கணக்கில் ஷேர் ஆகி வரவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

சாலை புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டிலிருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்த சாலை எங்கு அமைக்கப்பட்டது என்ற தகவல் எதிலும் இல்லை. நையாண்டிக்காக இந்த சாலையைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்துள்ளனர். ஆங்கிலம், ஹிந்தி, போலிஷ், ரஷ்யன், டச்சு, தாய், இந்தோனேஷியன், குரோஷியன் எனப் பல மொழிகளிலும் இந்த படத்தை வைத்து பதிவுகள் வெளியாகி இருந்தன. இதனால் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில் 2020ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. reddit.com தளத்தில் இந்த புகைப்படம் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது என்று tineye.com-ல் மேற்கொண்ட தேடல் முடிவுகள் நமக்குக் காட்டின. 

உண்மைப் பதிவைக் காண: Facebook

தி.மு.க ஆட்சி 2021 மே மாதம் அமைந்தது. ஆனால், இந்த புகைப்படம் 2020 செப்டம்பரில் இருந்து சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாட்டினரும் இதை தங்கள் ஊரில் நடந்தது என்று பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிகிறது. இதன் அடிப்படையில், தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட சாலை என்று பகிரப்படும் தகவல் தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று பகிரப்படும் படம், சமூக ஊடகங்களில் நையாண்டிக்காக 2020ம் ஆண்டில் இருந்து பகிரப்பட்டு வருவதையும் இது தமிழகத்தை சேர்ந்தது இல்லை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட தார் சாலை என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False