
‘’ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரூபிணி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். எனவே, இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Archived Link
Keerthana என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பெண் பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருக்கிறார். ஆனால், டாக்டர் மாதிரி இல்லை. அவரை டாக்டர் என நினைத்து இப்படியான பதிவை வெளியிட்டுள்ளனர். இதனை உண்மை என நம்பி, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவு உண்மையா என்ற சந்தேகத்தில் முதலில், ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அப்போது, இதேபோல நிறைய பதிவுகள் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதாக தெரியவந்தது. புகைப்படம் மாறி, மாறி இருந்தாலும், தகவலின் விவரம் ஒன்றாகவே இருந்தது.

நாம் ஆய்வு செய்யும் பதிவைப் போலவே மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், வேறொரு புகைப்படத்தை பகிர்ந்து, இவர்தான் ஏழை டாக்டர் என்று கூறியிருந்தனர்.
முதலில் நாம் சந்தேகப்படும் ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தை வைத்து, ஆய்வை தொடங்கினோம். அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அதில் இருப்பவர் ஒரு நடிகை என்ற விவரம் கிடைத்தது. ஆம், அவரது பெயர் நீரஜா.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அவரைப் பற்றி டெக்கான் கிரானிக்கல் வெளியிட்டிருந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, நடிகை ஒருவரின் புகைப்படத்தை எடுத்து, டாக்டர் ரூபிணி 10 ரூபாய்க்கு சிகிச்சை பார்க்கிறார் என வதந்தி பரப்பியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதே தகவலை வைத்து பகிரப்பட்டுள்ள மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

Archived Link
மேற்கண்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, இதில் இருப்பவர் சென்னையில் பணிபுரியும் டாக்டர். ஷர்மிளா குமார் என தெரியவந்தது. எனவே, இவர் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரூபிணி இல்லை என உறுதியாகிறது.

மருத்துவம் உள்பட பல்வேறு தொழில்களில் பணிபுரிவோர், தங்களது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும்போது, அதனை சிலர் தவறான வகையில் பயன்படுத்தி இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள் என்பதற்கு இந்த ஃபேஸ்புக் பதிவுகளே சிறந்த உதாரணம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 10 ரூபாயில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரூபிணி, என சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் சிகிச்சை பார்க்கும் டாக்டர் ரூபிணி: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
