
‘’6000 ஆண்டுகளுக்கு முந்தைய ராமன், அனுமன் சிலைகள் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்துத்துவம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மதம் சார்ந்த விசயமாக உள்ளதால், இதனை பலரும் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் உண்மையானதுதானா என உறுதி செய்ய முதலில், Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் பற்றிய உண்மை விவரம் கிடைத்தது.
இதன்படி, மேற்கண்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒன்று எனவும், அங்கு கிராம பொதுமக்கள் இதனை கண்டுபிடித்து ஊடகத்தினரிடம் தெரிவித்தனர் எனவும் விவரம் கிடைத்தது.
http://theanalyst.co.in/ இணையதளம் இதுபற்றி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, ஜார்க்கண்ட் மாநிலம், ஜிலிங்கா என்ற கிராம பஞ்சாயத்து சார்பாக நடைபெற்ற பணியின்போது, திடீரென மண்ணில் புதைந்து கிடந்த மேற்கண்ட சிலைகளை கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஜிலிங்கா கிராம பஞ்சாயத்து தலைவர் ஜிர்கா முண்டா, செய்தியாளர்களை வரவழைத்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையே, தி அனலிஸ்ட் இணையதளம் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஜனவரி 5, 2019 அன்று இதுபற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், இது ஜூன் 16ம் தேதி நிகழ்ந்த ஒன்று என்பதுபோல பதிவிட்டுள்ளனர்.
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link
குறிப்பிட்ட ஜிலிங்கா கிராமம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் குண்டி மாவட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் பின்தங்கிய பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இதுபற்றி நமது மராத்தி மொழி குழுவினர், சம்பந்தப்பட்ட உள்ளூர் போலீசை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்களும் இதனை உண்மை என உறுதி செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளதால், பெரும்பாலான ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகவில்லை என்றும், இந்த சிலைகள் ஜிலிங்கா பகுதியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டவை என்றும், ஜார்க்கண்ட் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தை நேரில் பார்வையிட்ட உள்ளூர் நபர் ஒருவரையும் போலீசார் கேள்வி கேட்டு உறுதி செய்துள்ளனர்.
இதுதவிர ராமர், அனுமான் சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட நிகழ்வை, ஜிலிங்கா கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகர் நேரில் பார்வையிட்டுள்ளனர். அத்துடன், கிராம பஞ்சாயத்து தலைவரும், போலீசாரிடம் தகவலை உறுதி செய்த சாட்சி ஒருவரும் இதுபற்றிய புகைப்படத்திலேயே நிற்கின்றனர். அவர்களை அடையாளத்திற்காக, வட்டமிட்டு காட்டியுள்ளோம். சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ளவர், இதனை நேரில் பார்த்த சாட்சி ஆவார். மஞ்சள் நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ளவர் ஜிலிங்கா கிராம பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
எனவே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை வைத்து, ஈராக்கில் தோண்டி எடுக்கப்பட்ட ராமர், அனுமன் சிலைகள் என தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாக தெரியவருகிறது. இதுபற்றி நாம் சம்பந்தப்பட்ட நபர்களிடமே பேசி உறுதி செய்துள்ளோம். இதே செய்தியை நமது மராத்தி மொழிப் பிரிவும் வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 6000 ஆண்டுகள் பழமையான ஹனுமான், ராமர் சிலைகள்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
