டெல்லி ஜும்மா மசூதி இமாம் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் இஸ்லாமியர் ஒருவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்களுக்கு பின்னால் பா.ஜ.க சின்னத்துடன் கூடிய ஃபிளக்ஸ் பேனர் உள்ளது. நிலைத் தகவலில், “ஷஹி இமாம் டெல்லி ஜும்மா மசூதி, பிஜேபி யில் இணைந்த நிகழ்ச்சி

நேரலையில் வந்தேமாதரம் பாரத்மாதாகீஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை கு.பாறை குணா கருப்பசாமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி ஜும்மா மசூதி என்பது உலகப் புகழ் பெற்றது. அந்த மசூதியின் தலைமை பொறுப்பில் உள்ளவர் பா.ஜ.க-வில் இணைந்தால் மோடி, அமித் ஷா, நட்டா போன்ற தலைவர்கள் முன்னிலையில் இணைவார். முன்னாள் அமைச்சர் தலைமையில் இணைவாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவில் உள்ள காட்சியுடன் தொடர்புடைய புகைப்படம் ஒன்றை முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்த்த போது வீடியோவும் அவர் வெளியிட்டிருந்தார். 

Archive

அதில், “டெல்லி ஜும்மா மசூதி அருகே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கழிப்பறை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் டெல்லி ஜும்மா மசூதி இமாம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியானது.

இமாம் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவரா, அக்கட்சியில் இணைந்தாரா உண்மை என்ன என்று அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர்கள் ‘’இது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி இந்தியில் வைரல் ஆனபோது இது தொடர்பாக டெல்லி மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷரிஷ் குரானாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். இந்த தகவல் தவறானது என்று அவர் உறுதி செய்தார்” என்றனர். 

இதுதொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ இந்தியில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் டெல்லி ஜும்மா மசூதி இமாம் பா.ஜ.க-வில் இணைந்தார் என்று பரவும் தகவல் மற்றும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி ஜும்மா மசூதி பகுதியில் கழிப்பறை கட்ட நடந்த அடிக்கல் நாட்டு விழா வீடியோவை எடுத்து டெல்லி ஜும்மா மசூதி இமாம் பா.ஜ.க-வில் இணைந்தார் என்று வதந்தி பரப்பிவருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டெல்லி ஜும்மா மசூதி இமாம் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False