FACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தொலைக்காட்சி ஒன்றின் விவாதம் ஆகியவற்றை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் சித்தூரில் கிறிஸ்தவ மத போதகர்களின் “இயேசு உயிர்ப்பிப்பார்” என்ற ஏமாற்று நாடகத்திற்கு பலியான இரண்டு இளம் பெண்கள்.

ஒரு கிறிஸ்தவ பள்ளியின் முதல்வரும், துணை முதல்வரும் தங்கள் மகள்களை அடித்துக் கொல்லும் அளவுக்கா அறிவும், இரக்கமும் இல்லாமல் இருப்பார்கள் ? இவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Munusamy K என்பவர் 2021 ஜனவரி 25 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி என்ற இடத்தில் பெற்ற மகள்களையே நரபலியாக கொடுத்த பெற்றோர் தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் மகள்கள் உயிரோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் பலி கொடுத்ததும், பூஜையை இன்னும் ஒரு நாள் தொடர அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் பிரச்னை செய்ததும் அதிர்ச்சி ரகம்.

அவர்கள் எந்த மதத்தினர் என்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. அவர்கள் எந்த கடவுளை நினைத்து பலி கொடுத்தார்கள் என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. நன்கு படித்த தாய், தந்தையே இப்படி தங்களின் இரண்டு படித்த மகள்களின் உயிரை காவு வாங்கிவிட்டார்களே என்றுதான் வேதனை பட்டு வந்தனர்.

இந்த நிலையில், உயிர்த்தெழுவார்கள் என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற முடிவுக்கு வந்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பலரும் இதை ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளனர். எனவே, இந்த தகவல் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

முதலில் பாலிமர் செய்தியைப் பார்த்தோம். அதில் கிறிஸ்தவ மத போதகர்தான் இந்த கொலைகளுக்கு காரணம் என்று கூறியுள்ளார்களா என்று பார்த்தபோது, அதில் அப்படி எதுவும் இல்லை. மேலும், தமிழகத்தை சேர்ந்த சாமியர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின் படி இவர்கள் இப்படி செய்துள்ளனர் என்றும், அந்த சாமியாரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியைப் படித்திருந்தால் இப்படி விஷமத்தனமான பதிவை வெளியிட்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது.

அசல் பதிவைக் காண: thenewsminute.com I Archive 1 I menafn.com I Archive 2

தொடர்ந்து இந்த செய்தியை ஆய்வு செய்தோம். அப்போது, மதனபள்ளியில் உள்ள அரசு டிகிரி மகளிர் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் வி.புருஷோத்தம் நாயுடு, அவரது மனைவியும் மாஸ்டர் மைண்ட் ஐஐடி டேலண்ட் பள்ளியின் நிர்வாகியுமான பத்மஜா ஆகியோர் தங்கள் மகள்களை நரபலி கொடுத்தனர் என்ற செய்தி நமக்கு கிடைத்தன.

அந்த செய்திகளில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24, 2021) அன்று கலியுகம் முடிவதையொட்டி மகள்களை அவர்கள் பலி கொடுத்திருப்பதும், விடிந்தால் ஜனவரி 25ம் தேதி சத்திய யுகம் பிறந்துவிடும். தங்கள் மகள்கள் உயிரோடு வந்துவிடுவார்கள் என்று அவர்கள் கூறியதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் அவர்கள் கிறிஸ்தவ பள்ளியில் பணியாற்றவில்லை என்பதும் உறுதியானது.

அசல் பதிவைக் காண: ap7am.com I Archive

இது தொடர்பாக வீடியோ எதுவும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது இரண்டு பெண்களின் தாய் பத்மஜாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவமனைக்கு அழைத்து வந்த வீடியோ கிடைத்தது. அதில், தான் சிவன் என்றும், தன்னுடைய உடலில் கொரோனா கிருமி இருக்காது என்றும் அவர் கூறுவதைக் கேட்க முடிந்தது. 

அசல் பதிவைக் காண: YouTube Link

மேலும் ஈடிவி வெளியிட்டிருந்த செய்தியில் கொலை நடந்த வீட்டின் பூஜை அறையைக் காட்டினர். அதில் இந்து தெய்வங்கள் படங்கள் இருப்பதைக் காண முடிந்தது. மேலும், கொல்லப்பட்ட இளம் பெண்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சிவன் வருகிறார் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதன் மூலம் இயேசு உயிர்ப்பிப்பார் என்று இந்த கொலைகள் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதர்களின் பேச்சைக் கேட்டு சொந்த மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இயேசு உயிர்ப்பிப்பார் என்று கிறிஸ்தவ போதகர் கூறியதால் ஆந்திராவில் இரண்டு இளம் பெண்களை பெற்றோரே நரபலி கொடுத்தார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False