
‘’செம்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்துக் குடித்தால் உயிருக்கே ஆபத்து,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில், ‘’தேங்காய் தண்ணீரில் உள்ள அமிலமும், தாதுக்களும் செம்புடன் (செப்பு) கலந்து தேங்காய் தண்ணீரை காப்பர் சல்பேட்டாக மாற்றிவிடும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பலரும் பாரம்பரியம் என்ற முறையில், உடல்நலனுக்கு உகந்தது என்பதற்காக, செம்பு பாத்திரங்களில் தண்ணீரை சேகரித்து வைத்து குடிப்பது வழக்கமாகும். இந்நிலையில்தான், மேற்கண்ட செய்தி, செம்பு பாத்திரங்களை உபயோகிப்பவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் பகிரப்பட்டு வருகிறது.
இதன் நம்பகத்தன்மை பற்றி அறியும் விதமாக, நாம் நேரடியாக, திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார் அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.

குறிப்பிட்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’இப்படியான பாதிப்பு ஏற்பட்டு யாரும் என்னிடம் சிகிச்சைக்கு வந்ததில்லை. காப்பர் (செம்பு) என்பது காப்பர் சல்பேட்டாக மாறுவதற்கு, சல்ஃபியூரிக் அமிலம் தேவைப்படுகிறது. ஆனால், தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புக்களே உள்ளன. சல்ஃபியூரிக் அமிலமே இல்லை எனும்போது, தேங்காய் நீர் எப்படி காப்பருடன் கலந்து காப்பர் சல்பேட்டாக மாறும்? வாய்ப்பே இல்லை. இது தவறான தகவல்,’’ என்று விளக்கம் அளித்தார்.
இதற்கடுத்தப்படியாக, நாம் சில அடிப்படை விசயங்களை ஆய்வு செய்தோம். இதன்படி, டாக்டர் விக்ரம் குமார் கூறுவதைப் போலவே, தேங்காய் நீரில் உள்ள மூலப்பொருட்கள் என்னவென்று பார்த்தோம். அவர் சொல்வது சரியாகவே இருந்தது.

இந்நிலையில், காப்பர் எப்படி காப்பர் சல்பேட்டாக மாறும் என்பதன் விவரமும் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, செம்பு பாத்திரத்தில் தேங்காய் நீர் கலந்தால், காப்பர் சல்பேட் உருவாகி, உயிரை குடிக்கும் என்பது தவறான தகவல் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:செப்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்து குடித்தால் உயிருக்கு ஆபத்தா?
Fact Check By: Pankaj IyerResult: False
