
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
நகர வீதியில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு வண்டியின் பின்புறம் விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, எதிர்காலம் இல்லை என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “டில்லி #விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் நடந்த டிராக்டர் பேரணி…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Shaik Hosan Shaik என்பவர் 2021 பிப்ரவரி 18 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் டிராக்டர் பேரணி நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
வெவ்வேறு படங்களைப் பதிவேற்றி தேடியபோது ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த விவசாயிகள் பேரணி என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டிருந்த பதிவுகள் கிடைத்தன. ஆனால், உறுதியான செய்தி, வீடியோ கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: rt.com I Archive 1 I poandpo.com I Archive 2
இதன் அடிப்படையில் ஜெர்மனி, விவசாயிகள், டிராக்டர் பேரணி என பல கீ வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது, 2021 பிப்ரவரி 6ம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் விவசாயிகள் பேரணி நடத்திய செய்தி கிடைத்தது. அந்த செய்தியைப் பார்த்தோம்.
அதில், “ஜெர்மனி அரசு பூச்சிகளை அழிக்கும் பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும், அதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
பூச்சிகளைக் காப்பாற்ற விவசாயிகளை அழிக்க வேண்டாம் என்று தலைப்பிட்டு வெளியான வேறு பல செய்திகளும் கிடைத்தன. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது.
நம்முடைய ஆய்வில் ஜெர்மனி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விதிமுறைகளுக்கு எதிராக நடந்த பேரணி வீடியோவை இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்தது என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜெர்மனியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தை இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Partly False
