FactCheck: போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படுமா?

அரசியல் சமூக ஊடகம்

‘’போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படும்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில் ஒரு நீண்ட கருத்தை பகிர்ந்துள்ளனர். அதன் சுருக்கம் என்னவெனில், ‘’போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அந்த இடத்தில் உடனே அபராதம் கட்ட முடியாது. ஈ-சலான் தருவார்கள். அதனை நாம் ஏடிஎம் கார்டு மூலமாக, ஸ்வைப் செய்துதான் கட்ட வேண்டும். இல்லை எனில், எஸ்பிஐ அல்லது அரசு ஈ சேவை மையங்களில் நேரில் சென்று அபராதம் செலுத்தும் வகையில் நமக்கு நோட்டீஸ் தருவார்கள். அதில் உள்ள எழுத்து மை சில நாளில் அழிந்துவிடும். அதன் பிறகும் அபராதம் செலுத்தாமல் நாம் அப்படியே இருந்தோம் எனில், சில நாட்களில் நமது ரேஷன் கார்டு தடை செய்யப்படும். ஈபி பில் செலுத்த முடியாது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்,’’ என்று குறிப்பிடுகின்றனர்.

இதனை வாசகர்கள் பலரும் உண்மையா என்று சந்தேகம் கேட்டு, நமக்கு +91 9049053770 எனும் வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பியிருந்தனர்.

மேலும், நிறைய பேர் இந்த தகவல் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்தும் வருவதைக் காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:
இந்த தகவல் பார்ப்பவர்களை பீதியடைய செய்வது போல இருப்பதால், நாம் நேரடியாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்க தீர்மானித்தோம். இதன்படி, தருமபுரி ஆர்டிஓ பணியில் உள்ள தாமோதரன் என்பவரை தொடர்பு கொண்டு, நமது ஊடக நண்பர்களின் உதவியுடன் விசாரித்தோம்.

மேற்கண்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’இந்த வதந்தி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மையில், இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. போக்குவரத்துத் துறை காவலர்கள் விதிக்கும் அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில், முதலில் போலீஸ் விசாரணை நடத்தப்படும். அதற்கும் ஒத்து வரவில்லை எனில், நீதிமன்றம் மூலமாக விளக்கம் கேட்கப்படும். அதன் பிறகும் அபராதம் செலுத்தவில்லை எனில், அதிகபட்சமாக, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும். அதேபோல, சம்பந்தப்பட்ட நபர் வாகன காப்பீடு பெற முயன்றால் உதவி செய்யப்படாது. இவை அனைத்தும் பொதுவாக அபராதம் செலுத்தத் தவறினால் எடுக்க எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகும். அதேசமயம், வாகன ஓட்டிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறலுக்கு ஏற்ப தண்டனை விவரங்கள் மாறுபடும். அதற்கும், இதற்கும் தொடர்பில்லை. கூடுதல் விவரங்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை படியுங்கள்,’’ என்றார்.

எனவே, மேற்கண்ட தகவல்கள் தவறானவை என்றும், வாசகர்கள் இவற்றை உண்மை என நம்பி பீதியடைய வேண்டாம் என்றும் குறிப்பிட விரும்புகிறோம்.

India Today Link I Chennai Traffic Rules I Tnsta.gov.in Link I New Traffic Rules

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படுமா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False