FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது*

*இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று அழைக்கப்படும் நாம், இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை நம் கண்முன்னால் பார்க்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Padma Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இங்கிலாந்தில் கோவில் எரிக்கப்பட்டது என்று பகிரப்பட்டுள்ளது. இங்கிலாந்து காவல் துறை செயலற்றது என்றும் குறிப்பிட்டு இந்துக்களைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீடியோவில் கோவிலை காண முடியவில்லை. சூப்பர் மார்க்கெட் என்று பெயர் பலகை இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்படி எந்த ஒரு சம்பவமும் நடந்ததாக எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, இங்கிலாந்து, சூப்பர் மார்க்கெட், இந்து கோவில், முஸ்லிம்கள், தீ, பர்மிங்ஹாம் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது கடந்த 2022 செப்டம்பர் மாதம் 19ம் தேதி பர்மிங்ஹாமில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் தீப்பிடித்து எரிந்ததாகச் செய்திகள் கிடைத்தன. இந்து கோவில் எரிக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தேடிய போது ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் நமக்கு கிடைத்தது. அதில், பர்மிங்ஹாமில் இந்து கோவில் எரிக்கப்பட்டதாக ட்விட்டரில் சிலர் பகிர்ந்து வருவதற்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீஸ் விளக்கம் அளித்திருந்ததைப் பகிர்ந்திருந்தனர். அதில், அந்த தகவல் தவறானது. வீடியோவில் செப்டம்பர் 19ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து காட்சி காட்டப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டபடி இருந்துள்ளனர். அதற்கு கார் பார்க்கிங் பிரச்னை காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

அந்த ட்வீட்டில் உள்ளது போன்று கூகுள் மேப்பில் அந்த இடத்தை, கடையைத் தேடி எடுத்தோம். அது சூப்பர் மார்க்கெட் என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கு கோவில் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தை விஷமத்தனமாக தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

கடையின் பெயர் Zeenat Supermarket என்றும் அது Alum Rock Road-ல் உள்ளது என்றும் தெரிந்தது. அதன் அடிப்படையில் மேலும் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து என்று செய்திகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. 

முடிவு:

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தை இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False