
“மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மகிட்டயே டாக்டர் இருக்காங்க” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது – செய்தி” என்று உள்ளது. இதற்கு கீழ், அமைச்சர் ஜெயக்குமார் போனில் பேசுவது போன்ற படத்தை வைத்து, “மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மகிட்டயே டாக்டர் இருக்காங்க பாத்துக்கலாம்” என்று கூறுவதுபோல போட்டோஷாப்பில் எழுதியுள்ளனர்.
இந்த பதிவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தம்மை விமர்சிப்பவர்வளை எதிரிகளாக பார்ப்பவர்கள் மத்தியில் அதையும் நேர்மறையாக சிரித்த முகத்துடன் எதிர்கொள்பவர் அமைச்சர் ஜெயக்குமார். 2018ம் ஆண்டு அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படங்கள் மற்றும் மழையில் நனையும் படம், தாஜ்மஹால் படம் ஆகியவற்றை இணைத்து இது என்ன பாடல் என்று கண்டுபிடியுங்கள் என்று சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. “தன்னைப் பற்றி வந்த மீம்ஸ் ஒன்று என்னை யோசிக்க வைத்துவிட்டது. யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய நண்பர்களுக்கு அதை ஃபார்வர்ட் செய்தார். தன்னை விமர்சனம் செய்வதையும் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் என்பதை இந்த பதிவு வெளிப்படுத்தியது. தன்னை விமர்சித்து மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களை மட்டுமே அமைச்சர் ஜெயக்குமார் கூறிவந்துள்ளார்.
Archived Link 1 | vikatan.com | Archived Link 2 |
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தொலைபேசியில் பெண் ஒருவருடன் பேசுவது போன்ற செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதை வைத்து தொடர்ந்து மீம்ஸ் வெளியாகி வந்தன.
தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். இதனால் அமைச்சர் ஜெயக்குமாரை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தனர் அ.ம.மு.க நிர்வாகிகள். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறான கருத்தை முதலில் பரப்பினார் என்று 2018ல் செய்திகள் வெளியாகின.
vikatan.com | Archived Link |
இந்த நிலையில் அமைச்சரை தொடர்புகொண்டு தான் கர்ப்பமாகிவிட்டதாக பெண் ஒருவர் பேசியதாகவும், அதற்கு அமைச்சர், கருவை கலைத்துவிடலாம் என்று கூறியதாகவும் ஒரு வாய்ஸ் கிளிப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில வாரங்களில் குழந்தை பிறந்துவிட்டதாக ஒரு பிறப்பு சான்றிதழ் வெளியானது.
இது குறித்து அப்போதே அமைச்சர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் எந்த ஒரு பெண்ணிடமும் இவ்வாறு பேசியது இல்லை. அந்த குரல் என்னுடையது இல்லை. இதை நிரூபிக்க எந்த ஒரு சோதனைக்கும் தயார்” என்று அறிவித்தார்.
ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவர் என்று எதிர்தரப்பினரால் கூறப்படும் நபர் அமைச்சருக்கு எதிராக புகார் எதையும் அளிக்கவில்லை. ஆனாலும் வதந்தி மட்டும் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கிறது. இது குறித்து பிரச்னையை கிளப்பிய வெற்றிவேலிடம் நிருபர்கள் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு கிடைக்கவே ஆடியோ வெளியாகி உள்ளது. ஆனால் நாங்கள் ஆடியோவை ரிலீஸ் செய்யவில்லை. நான் குற்றச்சாட்டு கூறவில்லை. உண்மை என்றுதான் சொல்கிறேன். ஊடகங்களிடம் பேசிவிட்டேன்… ஆளுநர் வரை இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல முயன்றேன்… ஆனாலும், பாதிக்கப்பட்டப் பெண் தரப்பில் சரியான அணுகுமுறை இல்லை. இதற்கு மேல் அவர்கள் தான் காவல் துறையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பின்வாங்கினார்.
puthiyathalaimurai.com | Archived Link 1 |
ndtv.com | Archived Link 2 |
indiatoday.in | Archived Link 3 |
இந்த நிலையில், “மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மிடம் டாக்டர் இருக்காங்க பாத்துக்கலாம்” என்று பழைய வதந்தியை நேரத்துக்கு ஏற்றார்போல மீண்டும் பதிவிட்டுள்ளனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு பேசினோம்.
“கடந்த ஆண்டு பரவிய கிளிப்பில் இருந்த குரல் என்னுடையது இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதை நிரூபிக்க எந்த ஒரு சோதனைக்கும் தயார் என்றேன். அரசியலில் என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். எனக்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் என்னை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என்று நினைக்கின்றனர். இந்த வதந்தியை பரப்புகிறவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.
நம்முடைய ஆய்வில், அமைச்சர் ஜெயக்குமாரை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.ம.மு.க நிர்வாகியுமான வெற்றிவேல் கூறியதும் இந்த பிரச்னையை முதலில் கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டே மறுத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக இதுவரை யாரும் எந்த ஒரு புகாரையும் அளிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மீது கோபத்தில் உள்ள ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே இந்த பிரச்னை பற்றி பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தன்னை கலங்கப்படுத்த இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரப்பப்படுகிறது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆதரங்கள் அடிப்படையில் அமைச்சர் ஜெயக்குமார் பெண் ஒருவருடன் பேசினார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் பொய்யானது விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மெயின் ரோட்டாண்டா வாம்மா; அமைச்சர் ஜெயக்குமார் பற்றி மீண்டும் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
