அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று ஒரு செய்தியின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி மூக்கு வரை முழுமையாக மாஸ்க் அணியாத புகைப்படத்துடன் கூடிய என்டிடிவி தமிழ் வெளியிட்டது போன்ற செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், "பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு" என்று இருந்தது.

இந்த பதிவை Selvakumar Ratnasamy என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றது தொடர்பாக பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின. அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். இந்த சூழலில் முகக் கவசம் சரியாக அணியாத பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஒரு செய்தி பகரப்பட்டு வருகிறது.

என்டிடிவி தமிழ் 2020ம் ஆண்டிலேயே தன்னுடைய தமிழ் சேவையை நிறுத்திவிட்டது. அதில் தற்போது தமிழ் செய்திகள் எதுவும் வெளியாவது இல்லை. இந்த சூழலில், மீண்டும் தமிழில் செய்தி சேவையை ஆரம்பித்துவிட்டார்களா என்ற சந்தேகத்துடன் இந்த செய்தியை ஆய்வு செய்தோம்.

என்டிடிவி தமிழ் இணையதள பக்கத்தைப் பார்த்தோம். 2021 மே மாதம் 27ம் தேதி கடைசியாக வணிக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதற்கு முன்பு 2020 செப்டம்பர் 30ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தனர். 2021 மே 27ம் தேதிக்குப் பிறகு என்டிடிவி தமிழில் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த செய்தி ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: NDTV I Archive

அமெரிக்க நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவிட்டிருந்தால் அது பற்றி செய்தி வெளியாகியிருக்கும். ஆனால், எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த செய்தியில், "மாஸ்க்கை சரியாகப்போடாமல் அமெரிக்கப் பிரமுகர்களைச் சந்தித்த விவகாரம், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு" என்று இருந்தது. எனவே, இந்த புகைப்படம் அமெரிக்கப் பிரமுகரை சந்தித்த போது எடுத்ததா என்று ஆய்வு செய்தோம். இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதுதான். பல ஊடகங்களிலும் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. குவால்காம் நிறுவனத் தலைவர் கிறிஸ்டியானோ ஆர் அமோனுடன் மோடி சந்தித்த போது எடுக்கப்பட்டது என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

ஓராண்டாக என்.டி.டி.வி தமிழில் செய்தி ஏதும் வெளியாகாத நிலையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற செய்தி எதுவும் தற்போது என்.டி.டி.வி தமிழில் வெளியிடப்படாத சூழலில், இந்த பதிவு போலியானது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இதை உறுதி செய்ய என்.டி.டி.வி தமிழில் பணியாற்றிய ஊடக நண்பரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், "2020 ஊரடங்குக்குப் பிறகு என்.டி.டி.வி தமிழ் சேவை நிறுத்தப்பட்டது. இந்த கட்டுரையை எழுதியதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பரத்ராஜ், தற்போது மாலைமலர் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளராக உள்ளார்" என்று கூறினார்.

இதையடுத்து, பரத் ராஜ் அலைபேசி எண்ணை பெற்று அவரிடம் நேரடியாக பேசினோம். அப்போது அவர், "2020 செப்டம்பரிலேயே என்.டி.டி.வி தமிழ் பிரிவில் இருந்து விலகிவிட்டேன். தற்போது மாலை மலர் டிஜிட்டல் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த கட்டுரை நான் வெளியிட்டது இல்லை. இது போலியானது" என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று என்டிடிவி தமிழ் வெளியிட்டதாகப் பகிரப்படும் செய்தி ஸ்கிரீன்ஷாட் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பரவும் செய்தி போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False