இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளம் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் இந்தியில் வெளியான ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "தேச துரோகிகள்..! தான், உக்ரைனில் தற்போது மாட்டிக்கொண்டு தவிக்கும் இந்திய மாணவி என்றும் தங்களை மீட்க, இந்திய அரசு எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்றும், காணொளிமூலம் இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் இருந்தபடி பொய்யான அவதூறுச் செய்தியைப் பரப்பிய இந்தப் பெண்ணை உபி போலீசார் கைது செய்துள்ளனர்…!இதில் highlightஆன விஷயம் என்ன தெரியுமா..?

ஹரோதி மகேந்திர யாதவ் என்ற சமாஜ்வாடி கட்சித் தலைவரின் மகள், வைஷாலி யாதவ் என்ற இந்தப் பீடை. போலீஸ் விசாரணையில் தன் தந்தை சொன்னதால் தான் வீடியோ வெளியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் தேசம் முழுவதும், மத்தியில் ஆளும் மோதிஜி தலைமையிலான பாஜக அரசு, எவ்வளவு உலகளாவிய & உள்ளூர் அழுத்தங்களை, பொய்களை, புனைசுருட்டுகளை, துரோகங்களை, துரோகிகளை, ஸ்டிக்கர்களை, நாதாரித்தனங்களைச் சமாளித்து, இப்பாரத தேசத்தைக் காக்கப் போராடுகிறது என்பதைக் காணும்போது, அதன் உண்மையான அங்கத்தினர் ஒவ்வொருவரையும் கைகூப்பி வணங்கத் தோன்றுகிறது.

ஜெய் மோடி சர்க்கார்..! பாரத் மாதா கி ஜெய்..! வந்தே மாதரம்..!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Karthik Iyer என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் படித்து வரும் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத சூழலில் அவதியுற்று வருகின்றனர். அவர்கள் நாடு திரும்ப தயாரான நிலையில் விமான கட்டண உயர்வு, விமானங்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களால் உக்ரைனை விட்டு வெளியே முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் நடந்தாவது உக்ரைன் எல்லை வரை வந்தால், அவர்களை மீட்டு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைக்கு வரத் தயாராக இருப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த சூழலில் இந்தியாவிலிருந்து கொண்டு உக்ரைனில் இருப்பது போல சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த வைஷாலி யாதவ் என்ற இளம் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண்ணை மிகவும் கீழ்த்தரமாகப் பலரும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, உண்மை என்ன என்று ஆய்வு செய்தோம்.

வைஷாலி யாதவ், சமாஜ்வாதி போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, உண்மையில் வைஷாலி யாதவ் உக்ரைனில் மருத்துவம் படித்து வருவதாகவும், அவர் அங்கு இருக்கும் போது வீடியோ வெளியிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. மேலும், அவர் உத்தரப்பிரதேசத்தில் ஹர்தோய் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைவராக அவர் இருப்பதாகவும், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் படிப்பதற்காக உக்ரைன் சென்றது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்ததாகவும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: timesnownews.com I Archive 1 I news18.com I Archive 2

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் வைஷாலி கைது செய்யப்பட்டாரா என்று ஹர்தோய் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், வைஷாலி கைது செய்யப்படவில்லை. அவர் வீடியோ வெளியிட்ட போது இந்தியாவில் இல்லை" என்று கூறினார். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கட்டுரை வெளியாகி உள்ளது.

Archive

மேலும், உத்தரப்பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் எஸ்.பி-யின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், இந்தியில் வெளியான பதிவை மொழியாக்கம் செய்து பார்த்த போது, "அந்த பெண் தற்போது ருமானியாவில் உள்ளார். அவர் போலியாக வீடியோ வெளியிட்டதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தவறானது. அந்த பெண்ணுக்கு தற்போது உண்மையில் உதவி தேவை" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் வைஷாலி என்ற பெண் உண்மையில் சமாஜ்வாடி கட்சியைச் சார்ந்தவர் என்பது உறுதியாகிறது. அவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். தான் உக்ரைனில் சிக்கிக்கொண்டதாக அவர் இந்தியாவில் இருந்து கொண்டு வீடியோ வெளியிடவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், "பிரதமர் மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொண்டே உக்ரைனில் இருப்பதாக போலியாக வீடியோ வெளியிட்டார்" என்று பகிரப்படும் பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்திரப்பிரதேசத்தில் இருந்து கொண்டே தான் உக்ரைனில் இருப்பதாக பொய்யான வீடியோ வெளியிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தியாவில் இருந்துகொண்டே உக்ரைனில் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False