
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தால் பெட்ரோல் விலை உயராது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை உயராது. தேர்தல் முடிந்தால் பெட்ரோல் விலை உயரும் என்ற பயம் அனாவசியமானது. இனி பெட்ரோல் விலை உயர்ந்தால் எங்களை செருப்பால் கூட அடியுங்கள் – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது.
இந்த பதிவை அண்ணனின் அட்மின் குழு என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மார்ச் 7ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. தினம் தோறும் பெட்ரோல் விலை உயர்வதும் அவ்வப்போது குறைவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயரவில்லை. அதற்கு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் சட்டமன்றத் தேர்தல் காரணம் என்று கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பெட்ரோலிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இனி பெட்ரோல் விலை உயர்ந்தால் எங்களை செருப்பால் அடியுங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பலரும் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த நியூஸ் கார்டின் டிசைன், பின்னணி வாட்டர் மார்க், தமிழ் ஃபாண்ட் என எதுவும் நியூஸ் 7 தமிழ் வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். நியூஸ் 7 தமிழ் மார்ச் 7ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை.
எனவே, இது குறித்து நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சுகிதாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தங்கள் சமூக ஊடக பக்கங்களில் “FAKE” முத்திரையுடன் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.
அண்ணாமலை இப்படி ஏதும் பேட்டி அளித்தாரா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பால் தவிர்த்து இதர பால் பொருட்கள் மீதான விலையை ஆவின் உயர்த்தியிருப்பதற்கும் மது பொருட்கள் விலையைத் தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பதற்கும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த செய்தி கிடைத்தது. ஆனால், பெட்ரோல் விலை உயராது என்று அவர் கூறியதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த தகவலும் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
