
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது கல் எறிந்த சங்கிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்த ஆண் ஒருவரை போலீசார் கைது செய்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய BJP கட்சியினர் கைது-!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவைMohamed Sidik என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 21ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மத அடையாள உடைகளை அணியக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிடவே, பிரச்னை பெரிதாக மாறியது. இதற்கு பதிலடியாகக் காவி துண்டுகளை அணிந்து வருவோம் என்று இந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் உச்சமாக, ஹிஜாப், புர்கா அணிந்த பெண்களை சூழ்ந்துகொண்டு இந்து அமைப்புகள் கோஷம் எழுப்புவது, போராடுவது என்று பிரச்னை திசை மாறியது.
இந்த நிலையில் கர்நாடகாவில், இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் போலீசார் மீது கல் வீசினார் என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பற்றிய முழு விவரமும் நமக்குக் கிடைத்தது.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ஈடிவி இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் புர்கா அணிந்து கொண்டு மது பாட்டில் கடத்திய நபர்கள் கைது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே வீடியோ தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தியில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கர்னூல் எஸ்.பி வெளியிட்டிருந்த ட்வீட் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ட்வீட் பதிவு தற்போது அகற்றப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கர்னூல் எஸ்.பி ஃபக்கீரப்பா காகினெல்லியைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, “இவர்கள் மது பாட்டில் கடத்தியதற்காகவே கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களும் மீட்கப்பட்டன” என்று உறுதி செய்தார்.
இதன் மூலம், கர்நாடகாவில் புர்கா அல்லது ஹிஜாப் அணிந்து கொண்டு வந்து போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய பா.ஜ.க – இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பாஜக-வினர் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஹிஜாப் அணிந்து வந்து போலீஸ் மீது பாஜக.,வினர் கல் வீசியதாகப் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
