
‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை நாம் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது நமக்கு சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.
அவற்றில் கடந்த ஏப்ரல் 17, 2022 அன்று amarujala.com வெளியிட்ட செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து படித்து பார்த்தோம். இதன்படி, கடந்த ஏப்ரல் 13,2022 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் (Shahjahanpur, uttar pradesh) பகுதி போலீசாரின் கவனத்திற்கு ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாகப் பரவுவதாக, தெரியவந்தது. இளைஞர் ஒருவரை சிலர் பிரம்பால் தாக்கும் காட்சிகள் இடம்பெற்ற அந்த வீடியோ, ட்விட்டரில் தொடங்கி படிப்படியாக இதர சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியதால், இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, Sadar Bazar போலீசில் ராஜீவ் பரத்வாஜ் என்பவர் புகார் பதிவு செய்தார். அந்த புகாரில் ‘’Chowk Kotwali பகுதியில் உள்ள South City Colony சேர்ந்த அக்னிவேஷ் குப்தா என்பவரின் வீட்டில் ஒரு வேலை இருப்பதாக, பிரதீக் திவாரி என்பவர் என்னை அழைத்தார். அங்கே சென்றபோது, என்னுடன் இருந்த ஒரு இளைஞர் அவர்களுக்குச் சொந்தமான பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதால், அவன் எங்கே எனக் கேட்டு என்னை கடுமையாக தாக்கினர்,’’ என்று ராஜிவ் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி அமர் உஜாலா வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

amarujala.com news link I thelallantop.com link
இந்த செய்திகள் எதிலும், தாக்கப்பட்ட நபர் தலித் என்றோ, ஜாதி வெறி காரணமாக இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்றோ குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், கூடுதல் விவரத்திற்காக, நமது இந்தி மொழிப் பிரிவினர் ஷாஜகான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமாரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘’பண்டா மாவட்டத்தில் தலித் ஒருவரை பாஜக தலைவர் தாக்கிய வீடியோ என்றும், அரசுப் பணியில் உள்ள தலித்தை ஜாதி வெறியர்கள் தாக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டு, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். உண்மையில், பாதிக்கப்பட்டவர் தலித் கிடையாது, அதேபோல, அவரை தாக்கிய நபர்களும் பாஜக.,வினர் இல்லை. இது முழுக்க முழுக்க ராஜீவ் பரத்வாஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிரதீக் திவாரி இடையேயான பண பரிவர்த்தனை தொடர்பாக நிகழ்ந்த தாக்குதல். இதுபற்றி 4 பேரை கைது செய்துள்ளோம். அதேசமயம், ராஜீவை லத்தியால் தாக்கிய பிரதீக் திவாரி தலைமறைவாக உள்ளார். அவரை தேடிவருகிறோம்,’’ என்றார்.
இதுதொடர்பாக, ட்விட்டரில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், அவர் தெரிவித்தார். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
நமது இந்தி மொழிப் பிரிவினர் வெளியிட்ட கட்டுரை லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Fact Crescendo Hindi Article Link
எனவே, பண பரிவர்த்தனை தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதம் முற்றி, ஒருவரை மற்றவர்கள் தாக்கிய வீடியோவை எடுத்து, ஜாதி காரணமாக, தலித் அரசு ஊழியர் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
