
‘’இந்தோனேசியாவில் 14 வயது சிறுவன் முட்டை போடுகிறான்,’’ என்ற தலைப்பில் ஏராளமான ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Marimuthu Yuvi எனும் ஃபேஸ்புக் ஐடி நபர் இதனை பகிர்ந்துள்ளார். இதேபோல பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என முதலில் ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அனைவருமே, இந்தோனேசியாவில் முட்டையிட்ட சிறுவன் என்றே தகவல் பகிர்ந்துள்ளனர்.

இதன்படி, மேற்குறிப்பிடப்படும் சிறுவனின் பெயர் அக்மல். இவன் முட்டையிடுவதாகக் கூறி, 2018 பிப்ரவரி மாதம் முதலாக, வைரலாக பரவ தொடங்கின. இதனை மேலே குறிப்பிட்ட ஃபேஸ்புக் ஆதார புகைப்படத்திலேயே காணலாம். கோழிதான் முட்டை இடும். மனித இனம் முட்டை இடுவது என்பது நம்ப முடியாத விசயமாகும்.
ஒருவேளை இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில் கூகுளில் ஆதாரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக நிறைய செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

அதாவது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் குறிப்பிடப்படும் சிறுவன், கடந்த 2016ம் ஆண்டு முதலாக, முட்டையிட்டு வருவதாகவும், இதுவரை 20 முட்டைகளை அவர் இட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதன்பேரில், அந்த சிறுவனை இந்தோனேசியாவில் உள்ள கோவா பகுதியை சேர்ந்த செயிக் யூசுஃப் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள். அங்கும் அந்த சிறுவன் சில முட்டைகளை இட்டுள்ளான். இதனை மருத்துவர்களும் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், மனிதர்கள் முட்டையிடுவது சாத்தியம் இல்லை எனவும், அந்த சிறுவன் தனது ஆசன வாயில் முட்டையை பதுக்கி வைத்து பின்னர் வெளியே தள்ளுகிறான் எனவும், நேரில் பார்த்த டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், https://www.express.co.uk/ என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, DailyMail வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இந்த சிறுவனை மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும், இதில் உண்மை என்னவென்று விரைவில் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதவிர, ஏற்கனவே இதுபோல, ஒரு நபர் ஜகர்த்தா பகுதியில் முட்டை இட்டு பலரையும் ஏமாற்றி வந்திருக்கிறார். ஆனால், மருத்துவ ஆய்வில் அவர் கோழி முட்டையை ஆசன வாயில் பதுக்கி வைத்து இவ்வாறு செய்தது அம்பலமானது. அதுபோல, இந்த சிறுவனும் ஏதேனும் தில்லுமுல்லு செய்திருக்கலாம் என தெரிகிறது.
அறிவியல்பூர்வமாக, முட்டை இடுவது மனித இனத்திற்கே சாத்தியமல்லாத விசயமாகும். ஏனெனில், மனிதர்கள் குட்டி போட்டு பராமரிக்கும் பாலூட்டி வகையை சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன், குறிப்பிட்ட சிறுவன் எதோ தில்லுமுல்லு செய்து மற்றவர்களை குழப்புகிறான். இதனை சம்பந்தப்பட்ட இந்தோனேசிய மருத்துவமனை மருத்துவர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே, இது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல், தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய குழப்பமான பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
