
‘’பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், நிறைய புகைப்படங்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றை, டைனோசர் முட்டைகள் எனக் கூறுவதால், பலரும் உண்மை என நம்பி இந்த தகவலை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரம்பலூரில் உள்ள குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் நிறைய கிடைத்துவிட்டதாக, பல்வேறு ஊடகங்களிலும் கடந்த 22, அக்டோபர் 2020 முதல் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி புகைப்படங்களும் பகிரப்பட்டன.

இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி பகிர, வழக்கம்போல சமூக வலைதளங்களில் இதனை கேலி, கிண்டல் செய்து மீம்ஸ்களும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில், இவை டைனோசர் முட்டை இல்லை. நத்தை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சம் ஆகும். அது நாள்பட நாள்பட படிமம் ஆகி, மண்ணில் புதைந்து, முட்டை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Ammonite sediments எனச் சொல்வார்கள்.
இந்த செய்தி பரவ தொடங்கிய சில மணி நேரங்களில், குறிப்பிட்ட குன்னம் பகுதியில் தொல்லியல் துறை மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஒன்று நேரில் சென்று ஆய்வு நடத்தியது. பின்னர், இவை டைனோசர் முட்டை இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இவை ஏன் டைனோசர் முட்டைகள் இல்லை என்பது பற்றி, புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜா என்பவர் விரிவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார்.
அதில், அவர், ‘’குறிப்பிட்ட குன்னம் பகுதியில் நான் பலமுறை ஆய்வு செய்திருக்கிறேன். தற்போது கிடைத்துள்ள பொருட்கள் டைனோசர் முட்டை அல்ல. அவை நத்தை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சம் ஆகும். அது நாள்பட நாள்பட தாதுப் பொருள் சேர்ந்து, மண்ணில் புதைந்து, முட்டை போன்ற வடிவில் தோற்றமளிக்கும். பலர் இதனை டைனோசர் முட்டை என தவறாகக் கருதிவிடுகின்றனர்,’’ எனக் கூறியுள்ளார்.
இதன்படி, ஈடிவி பாரத் தமிழ், இந்து தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் நிர்மல் ராஜா பற்றி வெளியிட்ட செய்திகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகள் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்துள்ளன. அவை தற்போது நிலப்பரப்பாக மாறிவிட்டாலும், அங்கே அவ்வபோது கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் கிடைப்பது வழக்கமாக உள்ளது.
2) குன்னம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொல்லுயிர் எச்சங்கள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்குறிப்பிட்ட படிமங்கள் பற்றிய செய்தியும். இவை டைனோசர் முட்டை இல்லை என நேரில் ஆய்வு செய்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்: வதந்தியை நம்பாதீர்!
Fact Check By: Pankaj IyerResult: False
