FACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சைக் கேட்கக் கூடிய மக்கள் வெள்ளம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கடல் போல மக்கள் திரண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மக்கள் வெள்ளம். எங்கே? பீகாரில் தேர்தல் பிரசார கூட்டம். யோகி ஆதித்தநாத் பேச்சை கேட்க இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Ramasamy என்பவர் 2020 அக்டோபர் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அது தொடர்பான வதந்திகளும் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. 2020 அக்டோபர் 20ம் தேதி யோகி ஆதித்யநாத் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிரசார கூட்டத்தின் படம் என்று பகிர்ந்து வருகின்றனர்.

இது பார்க்க மிகவும் பழைய படம் போல உள்ளது. தெளிவின்றி இருப்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது இந்த படத்தை 2014ம் ஆண்டு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கொல்கத்தாவில் நடந்த மோடி பங்கேற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

2014 பிப்ரவரி 5ல் deshgujarat.com என்ற இணையதளம் வெளியிட்ட பதிவில் இந்த புகைப்படமும் இருந்தது. அதில், கொல்கத்தாவில் நடந்த மோடி பேரணி என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: deshgujarat.com I Archive

2014ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பீகார் தேர்தல் பிரசாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சைக் கேட்க திரண்ட கூட்டம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2014ம் ஆண்டு மோடியின் பிரசார கூட்ட படத்தை, யோகி ஆதித்யநாத் பீகார் பிரசார கூட்டம் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •