FactCheck: கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!
‘’கோத்தபய ராஜபக்சே, தமிழர்களையும், முஸ்லீம்களையும் மற்றும் இதர சிறுபான்மை இன மக்களையும் நேரடியாக அச்சுறுத்தும்படி பேசியுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
‘இனி தமிழன் அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’, எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது பேசிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘நான் ஒரு சிங்கள தேசிய தலைவன். அந்த அடிப்படையில்தான் ஆட்சி செய்வேன்‘ என்று சூளுரை செய்துள்ளார். இதனால், அங்கு வாழும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையின மக்கள் பகிரங்க மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். பலர் கருத்து கூறக்கூட அஞ்சுகிறார்கள்,’’ என்று மிக நீண்டதொரு விளக்கத்தை அளித்துள்ளனர்.
இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதால், ஃபேஸ்புக் வாசகர்களிடையே குழப்பம் காணப்படுகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் கூறியுள்ளதைப் போல, கோத்தபய ராஜபக்சே, தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களை மிரட்டி எதுவும் சுதந்திர தின உரையின்போது பேசினாரா என ஆய்வு மேற்கொண்டோம்.
இதன்படி, நமது இலங்கை குழுவினரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள் இதன்பேரில், கோத்தபய ராஜபக்சே அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அவர்கள், கோத்தபய ராஜபக்சேவின் பேச்சை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று கூறி, அவரது பேச்சின் முழு விவரத்தையும் அளித்தனர்.
அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
Gotabaya Rajapaksa Speech Link I Archived Link I Archived PDF Link
இதுபற்றி கோத்தபய ராஜபக்சே, அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர அவரது பேச்சின் முழு ஊடக அறிக்கையை, இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடகப் பிரிவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முழுமையான ஊடக அறிக்கை லிங்க்…. un.int/srilanka Link
இதன்படி, கோத்தபய ராஜபக்சே, எந்த இடத்திலும் தமிழர்களையோ அல்லது இதர சிறுபான்மை இனத்தவரையோ அச்சுறுத்தும் வகையில் சுதந்திர தின உரையில் (04.02.20 பேசவில்லை. அவர், ‘’சிங்கள நெறிகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட நாடு இலங்கை. இதனை எனது ஆட்சிக்காலம் முழுவதும் பாதுகாப்பேன். அதேபோல, எந்த மதத்தை பின்பற்றுவோரும் சுதந்திரமாகச் செயல்படுவதை எனது ஆட்சிக்காலம் முழுக்க உறுதி செய்வேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். இந்நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் சரிசமமான உரிமை உள்ளது,’’ என்றுதான் பேசுகிறார்.
நேரடியாக அவர் கூறுவது இது மட்டுமே. இதற்கு அர்த்தம் கற்பிக்க முயன்றால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அவற்றை நம்பினால், வீணான அரசியல் குழப்பம்தான் மிஞ்சும் என்பதால், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Explainer