
‘’நடிகர் விஜய் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உதவுகிறார்,’’ என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

கடந்த மார்ச் 30, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கு அதிலும் அரசுக்கோ, மக்களுக்கோ நிதியுதவி தர மாட்டார்,’’ என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மையா என்று நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் வழியே கேட்டுக் கொண்டதால் நாம் ஆய்வு செய்ய தொடங்கினோம்.
உண்மை அறிவோம்:
இதுபற்றி நாம் நியூஸ்7 தமிழ் ஆசிரியர் குழுவினரிடம் கேட்டபோது, ‘’இப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை. வழக்கம்போல, இதுவும் ஒரு போலிச் செய்திதான்,’’ எனக் கூறினர்.
அடுத்தப்படியாக, இதுபற்றி இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை நேரடியாக தொடர்பு கொள்ள முயன்றோம். அவரது அலைபேசி எண்ணில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ‘’இப்படி அவர் ஒருபோதும் பேசியதே இல்லை. அரசியல் கட்சி தொடங்கிய விவகாரத்தில்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. மற்றபடி, கடந்த மார்ச் 2020 காலக்கட்டத்தில் அவர் இப்படி எதுவும் பேசியதாக நாங்கள் கேள்விப்படவில்லை,’’ எனக் கூறினர்.
நாமும் குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்டோம். இதில் உள்ள ஃபாண்ட் மற்றும் வாக்கியப் பிழைகள், அது மற்றும் ஒரு போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதிப்படுத்தின. இதுபற்றி நியூஸ்7 தமிழ், எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பிலும் விளக்கம் கேட்டு, உறுதி செய்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வு செய்யும் தகவல் மற்றும் ஒரு போலிச் செய்திதான் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
