
வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி செக்-ஆக கொடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். காசோலையுடன் பகிரப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல இருந்தது. காசோலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி வழங்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு மேல், “*பகிருங்கள்,* *_கிழியட்டும் பாஜக முகத்திரை_* *விஜய்மல்லையா* BJP க்கு கட்சி நிதியாக ரூபாய் *35 கோடியை* 2016 ல் வழங்கிய ஆக்ஸிஸ் பேங்க் காசோலை..” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் இந்த படம் பகிரப்படுகிறதா என்று பார்த்தோம். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். Govind Raj என்பவர் 2020 நவம்பர் 20ம் தேதி ஷேர் செய்திருந்தார். பல ஆண்டுகளாக ஏராளமானோர் இதை ஷேர் செய்து வந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
வங்கிகளில் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு, காங்கிரஸ் கட்சிக்கு பல கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுத்துவிட்டு தப்பினார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா பாரதிய ஜனதா கட்சிக்கு 35 கோடி ரூபாய் வழங்கியதாக பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பான கட்டுரைகளைக் காண…
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி?
இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் யாராவது ஷேர் செய்கிறார்களா என்று பார்த்தோம். அப்போது 2017ம் ஆண்டு முதல் நூற்றுக் கணக்கானோர் இதை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. தற்போது 2020ம் ஆண்டிலும் கூட பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இந்த படம் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
விஜய் மல்லையா பாரதிய ஜனதா கட்சிக்கு செக் கொடுத்தார் என்றால் இப்படி வெளிப்படையாகவா கொடுப்பார். கையால் எழுதிக் கொடுக்க வேண்டியதும் இல்லை. செக் வேண்டும் என்றால் அவருடைய உதவியாளர்கள் அழகாக பிரிண்ட் செய்து கொண்டு வந்துவிடுவார்கள். அப்படி அவசர அவசரமாக கொடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுப்பாரா என்று தெரியவில்லை.
Bharatiya Janata Party என்பதை காசோலையில் Bhar(a)tiya Jan(a)ta Party என்று எழுதியுள்ளனர். எனவே, இது அசல் காசோலையாக இருக்காது என்று தெரிந்தது.
இந்த காசோலை 2016 நவம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டதாக உள்ளது. அதே நேரத்தில் விக்கிப்பீடியாவை பார்த்தபோது 2016 மார்ச் மாதமே விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. தொடர்ந்து தேடியபோது அவர் 2016 மார்ச் 2ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறினார் என்று மத்திய அரசு அறிவித்தது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய மல்லையா, அதற்கு எட்டு மாதங்கள் கழித்து நவம்பரில் காசோலை வழங்கினார் என்பது ஏற்புடையதாக இல்லை.
அசல் பதிவைக் காண: ndtv.com I Archive
விக்கிப்பீடியாவில் விஜய் மல்லையாவின் கையொப்பம் பகிரப்பட்டு இருந்தது. அதற்கும், இந்த காசோலையில் உள்ள கையெழுத்துக்கும் சம்பந்தமே இல்லை. போலியாக ஒரு செக்கை உருவாக்கி அதில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விஜய் மல்லையா என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: racingpulse.in I Archive
காசோலையில் இந்த வங்கிக் கணக்கு Glamour Steels Private Limited-க்கு உரியது என்று உள்ளது. வழக்கமாக விஜய் மல்லையா வழங்கும் காசோலைகள் UB Group என்று இருக்கும் என்பதை அவருடைய கையெழுத்து தொடர்பாக தேடியபோது கிடைத்த காசோலை படங்களில் இருந்து காண முடிந்தது.
இந்த செக்கை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே செக்கை பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சிக்கு 35 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவு வைரலாக பகிரப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு ஏற்கனவே இது தொடர்பாக ஆய்வு கட்டுரை வெளியிட்டிருந்ததும் தெரிந்தது.
அசல் பதிவைக் காண: twitter.com I Archive
இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா கொடுத்த செக் என்று போலியான காசோலையைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
இந்தியாவில் இருந்து தப்பித்துச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா வழங்கிய 35 கோடி ரூபாய்க்கான காசோலை என்று பகிரப்படும் படம் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விஜய் மல்லையா பாஜக.,வுக்கு தந்த ரூ.35 கோடி காசோலை என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
