
மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு காவி உடை அணிந்து சங்கிகள் வாக்கு கேட்டார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
காவி உடை அணிந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மேகாலயா இடைத் தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதினால், சிலுவை மாட்டிக் கொண்டு ஓட்டு கேட்கும் நாகரீக சங்கிகள்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை வ.ம.வ.ஆன்டனி ராஜ் என்பவர் நவம்பர் 10, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த ஆண்டே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. கர்நாடகாவில் கிறிஸ்தவ பிஷப் ஒருவர் காவி உடை அணிந்து நெற்றியில் திலகம் வைத்தபடி திருப்பலி நிறைவேற்றினார் என்றும் மதம் மாற்றும் நடவடிக்கையாக இந்து மதத்தைக் காப்பி அடித்து இப்படி செய்தார் என்றும் தீவிர வலதுசாரிகள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்திருந்ததாக ஏற்கனவே செய்திகளில் பார்த்த ஞாபகம் இருந்தது.
எனவே, மேகாலயாவில் வாக்கு கேட்க பா.ஜ.க-வினர் சிலுவை அணிந்து சென்றார்கள் என்ற தகவல் தவறானது என்று தெரியவே, அதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இந்த படத்துடன் 2019 செப்டம்பர் 13ம் தேதி செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. கிறிஸ்தவ பிரிவான கத்தோலிக்கத்தின் பெல்காம் (பெல்காவி) ஆயர் டெரீக் ஃபெர்ணான்டஸ் காவி உடை அணிந்து திருப்பலி நிறைவேற்றினார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தொடர்ந்து தேடிய போது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இணையதளம் ஒன்றிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதுவும் செப்டம்பர் 13, 2019 அன்று வெளியிடப்பட்டு இருந்தது.
அதில் பெல்காம் கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு பிலிப் குட்டி ஜோசப் என்ற பாதிரியாரின் பேட்டியை வெளியிட்டிருந்தனர். இந்த படம் பற்றி அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் 2019 ஆகஸ்ட் 29ம் தேதி பெல்காமில் (பெலகாவி) இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள தேஷ்னூரில் உள்ள கிறிஸ்தவ மடத்தில் எடுக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன்பு சேசு சபை பாதிரியார்கள் இங்கு வந்து லிங்காயத்து இன மக்கள் மத்தியில் இந்த மடத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் அங்கு ஏற்கனவே இருந்த மடத்தின் பழக்கங்களை மதித்து சைவ உணவு உட்கொண்டு, காவி உடை உடுத்தி அவர்களைப் போலவே வாழப் பழகினர்.

அசல் பதிவைக் காண: indiancatholicmatters.orgI Archive
இந்த கிறிஸ்தவ மடத்தில் நற்கருணை பேழை கூட லிங்க வடிவில் அமைக்கப்பட்டதுதான். அந்த மடத்துக்கு பெல்காம் ஆயர் வந்த போது, மடத்தின் வழக்கப்படி அவருக்கு காவி உடை வழங்கப்பட்ட, நெற்றியில் திலகமிடப்பட்டது. அதனுடனே அவர் திருப்பலி நிறைவேற்றினார்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மத மாற்றம் செய்யும் நோக்கில் இங்கு காவி உடையில் வரவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்
லிங்காயத்து என்பது இந்து மதம் இல்லை, அது தனி மதம் என்று கர்நாடக அரசு பரிந்துரை செய்திருந்தது. நாங்கள் இந்துக்கள் இல்லை, மூட நம்பிக்கைகளை எதிர்த்து வேதம், ஆகமம் இன்றி உருவாக்கப்பட்டது லிங்காயத்து மதம் என்று கூறி லிங்காயத்துக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்க நீண்ட நாட்களாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் கர்நாடக மாநிலம் பெல்காமில் 2019ல் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.
படத்தில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. பெல்காம் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆயர் என்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடக மாநிலத்தில் 2019ம் ஆண்டு கிறிஸ்தவ ஆயர் ஒருவர் காவி உடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்ற படத்தை தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
