
கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது!
32000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற் பசிக்கு இரையான பரிதாபம்! மறுத்தவர்கள் மண்ணில் புதைக்பட்ட பரிதாபம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் S Paranthaman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்து கேரள பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பது போன்று பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். கேரளாவிலிருந்து 32000 இளம் பெண்கள் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, பயங்கரவாதிகளின் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பது போன்று வீடியோ உள்ளது. இதனால், ஏராளமானோர் இதை பகிர்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள பெண் எப்படி வீடியோ வெளியிட முடியும் என்ற சந்தேகத்தில் இந்த வீடியோ பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். வீடியோவின் தொடக்கத்தில் தன்னுடைய பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்று கூறி அந்த பெண் பேசத் தொடங்குகிறார். தாங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டோம் என்பதை இந்தியில் கூறுகிறார். கீழே ஆங்கில மொழி பெயர்ப்பும் அளித்திருந்தனர். கடைசியில் இதுதான் கேரளாவின் ஸ்டோரி என்று கூறி முடிக்கிறார்.
எனவே, ஷாலினி உன்னிகிருஷ்ணன், கேரளா ஸ்டோரி, ஐஎஸ் போன்ற சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ உண்மையானது இல்லை, திரைப்படம் ஒன்றின் டீசர் என்று தெரிந்தது.
அதா சர்ஷா (Adah Sharma) என்ற நடிகையின் நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதன் அடிப்படையில் யூடியூபில் படத்தின் டீசரை தேடி எடுத்தோம். அதில் அந்த பெண் தி கேரளா ஸ்டோரி என்று கூறிய பிறகு, தயாரிப்பு, இயக்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, திரைப்படம் விரைவில் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பகுதியை அகற்றிவிட்டு, உண்மை சம்பவம் போல இருக்க சமூக ஊடகங்களில் வதந்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
இந்த திரைப்படத்தை Sunshine Pictures என்ற நிறுவனம் தயாரிப்பதாகவும், திரைப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் திரைப்படத்தின் டீசரை எடுத்து வந்து, உண்மை சம்பவம் போல பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, சந்தித்த பாதிப்பு குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி கேரளா ஸ்டோரி என்ற படத்தின் டீசரை, உண்மை சம்பவம் போல சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!
Fact Check By: Chendur PandianResult: False
