மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், பொது மக்கள் அந்த மழை நீரில் நனைந்தபடி நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “4000 கோடி அப்பு… நல்ல 🚿 ஷவர் சென்னைவாசிகள் ஜாலி. வீடியோ from:CTR.Nirmalkumar அண்ணாவிற்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Kavitha Rajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் மழை நீர் தேங்கியது என்று பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஐடி-விங்கில் இருந்து தொடர்ந்து பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் – சமூக ஊடக பிரிவு நிர்வாகி ஒருவர் தன்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னையில் பாலத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதாக வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை அக்கட்சியினர் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

வீடியோவில் சென்னையில் எந்த இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும், மேம்பாலத்தில் செல்லும் வாகனம் இரட்டை பஸ் போல உள்ளது. சென்னை நகரில் இரட்டை பஸ் இயக்கப்பட்டுப் பல நாட்கள் ஆன நிலையில் இந்த வீடியோ சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், கீழே சாலையிலிருந்த நபர்களைப் பார்க்க வட இந்தியர்களைப் போல தெரிந்தனர். எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், நமக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. வேறு வேறு காட்சிகளை வைத்துத் தேடிய போது, டெல்லியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகச் சிலர் பதிவிட்டிருந்தனர். சிலர், இது லாகூரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். லாகூரில் மேம்பாலத்தில் இருந்து கொட்டும் அருவி என்று குறிப்பிட்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று வேறு ஒரு வீடியோவை பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், லாகூர், மேம்பாலம், மழை நீர் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, தெளிவற்ற யூடியூப் ஷார்ட்ஸ் நமக்கு கிடைத்தது. அதில் அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது லாகூரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு ட்விட்டரில் 2022 செப்டம்பர் 30ம் தேதி PakWeather.com என்ற ஐடி கொண்ட பக்கம் பதிவிட்டிருந்தது. அதில் இந்த வீடியோ லாகூரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Archive

அந்த வீடியோ தெளிவாக இருந்தது. அதில் ஒரு கட்டிடத்தில் “ABU YOUSAF” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், கூகுள் மேப்பில் லாகூர் அபு யூசுப் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, லாகூரில் அப்படி ஒரு கடை இருப்பது தெரிந்தது. அதுவும் மேம்பாலத்துக்கு அருகில். அபு யூசுப் கடையைக் காண முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தானின் லாகூரில் எடுக்கப்பட்ட வீடியோவை, சென்னையில் எடுத்தது என்று தவறாக விஷமப் பிரசாரம் செய்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

உண்மைப் பதிவைக் காண: google.com I Archive

முடிவு:

பாகிஸ்தானின் வீடியோவை எடுத்து, சென்னையில் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டுகிறது என்று தவறான தகவலை நெட்டிசன்கள் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply