மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் சென்னை 2.0 ஒரு வெத்து விளம்பரம் சுத்துது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Suyambu Nadar P என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் பருவமழை பெய்து வரும் சூழலில், மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது பாதிப்பு குறைவு என்றும் கடந்த ஆண்டுகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு தேங்கவில்லை, பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது என்று தி.மு.க-வினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் முன்பாகவே மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

கொளத்தூர் எம்.எல்.ஏ அலுவலகம் இந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம்தான் இதை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இது தொடர்பான வீடியோ நமக்கு யூடியூபில் கிடைத்தது.  ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பழைய அலுவலகத்தின் புகைப்படம் உள்ளது. 2021 மற்றும் 2022 அக்டோபர், நவம்பர் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். கூகுள் மேப்பில் தேடிய போது கூகுள் ஸ்ட்ரீட் படங்கள் கிடைத்தன. 2022 பிப்ரவரியில் கூகுள் ஸ்ட்ரீட் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது வரை எம்.எல்.ஏ அலுவலகம் புதுப்பிக்கப்படவில்லை என்று தெரிந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டதாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.

எனவே, புதிதாகக் கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் எம்.எல்.ஏ அலுவலகம் படத்தை தேடினோம். அக்டோபர் 2022 இறுதியில் சிலர் கொளத்தூர் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு புகைப்படம் எடுத்து அதை கூகுள் மேப்-ல் பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் எம்.எல்.ஏ அலுவலகம் கார்ப்பரேட் அலுவலகம் போல் பிரம்மாண்டமாக இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 2022 நவம்பரில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் 2022 நவம்பரைச் சேர்ந்தது இல்லை என்பது உறுதியானாலும், அது எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தகவல் கிடைத்தது. பலரும் 2021ம் ஆண்டு இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. 

Archive

பா.ஜ.க நிர்வாகிகள் உள்பட பலரும் இந்த 2021ம் ஆண்டு புகைப்படத்தை 2022ம் ஆண்டு நவம்பரில் பகிர்ந்திருந்தனர். அதற்கு இந்த புகைப்படம் 2021ல் எடுக்கப்பட்டது, வதந்தியை பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு  தி.மு.க-வினர் கமெண்ட் செய்திருந்ததை காண முடிந்தது. மேலும், திமுக நிர்வாகிகள் பலரும் தற்போது கொளத்தூர் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் இன்றி சாலை சுத்தமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது. அதன் அடிப்படையில் சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டையும் வெளியிட்டிருந்தது.

Archive

இதன் மூலம் 2021ம் ஆண்டு நவம்பரில் பரப்பிய அதே படத்தை, 2022 நவம்பரிலும் பரப்பி, முதலமைச்சரின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது என்று விஷமத்தமனான வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கியுள்ளது என்று பரவும் படம் 2021ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

Leave a Reply