தாயின் அணைப்பில் உயிர் பெற்ற குழந்தை என்று பரவும் விளம்பர வீடியோ!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர் பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரட்டைக் குழந்தைகள் மருத்துவமனை தொட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு குழந்தை அசைகிறது, மற்றொரு குழந்தை இறந்தது போல் உள்ளது. குழந்தையின் தாய், தந்தை அழுகின்றனர். மருத்துவரும் குழந்தையை எண்ணி வருந்துகிறார். அந்த குழந்தையை தூக்கி வைத்து தாய் கண்ணீர் வடிக்கிறார். குழந்தையை தன் மார்போடு அணைக்கிறார். சிறிது நேரத்தில் குழந்தை அழுகிறது. மருத்துவர்கள் வியக்கிறார்கள். அத்துடன் வீடியோ முடிவடைகிறது. 

நிலைத் தகவலில், “ஒரு தாய்க்கு இரட்டை குழந்தை பிறந்தது ஒன்று இறந்து விட்டதென மருத்துவர்கள் விதி எழுதிவிட்டனர் அந்த தாய் குழந்தையை கடைசியாக கையில் எடுக்க விரும்பினார் பின்னர் நடப்பதை பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Sundaram Sundaram Sundaram Sundaram என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பகிர்ந்துள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிறந்த, இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது என்றும், அந்த குழந்தையை தாய் தூக்கி அணைத்ததும் குழந்தை உயிருடன் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இறந்துவிட்டதாக, அறிவித்த நிலையில் குழந்தை மீண்டும் உயிரோடு வருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. லட்சத்தில் ஒன்று நிகழலாம். இது உண்மையா, பொய்யா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த வீடியோ உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ உண்மையானது போல இல்லை. அதன் கோணங்கள் மாறி மாறி வருகிறது. மருத்துவமனையில் ஆங்காங்கே கேமரா வைத்து ஒவ்வொருவரையும் தனியாக எடுத்து எடிட் செய்திருப்பதைப் பார்க்கும் போது ஏதோ படம், விளம்பரத்தின் காட்சி போல உள்ளது. எனவே, வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது, பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். Peera Studio என்ற யூடியூப் சேனரில் உண்மையான ஆடியோவுடன் கூடிய வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவின் கடைசி பகுதியில், Babi mild Natural ‘N Mild – Osotspa” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேபி மைல்ட் என்று ஏதேனும் நிறுவனம் உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது Baby Babi Mild Natural ‘N Mild என்ற பெயரில் குழந்தைகளுக்கான பொருட்கள் நிறுவனம் இயங்கி வருவது தெரிந்தது. இதன் இணையதளத்துக்குச் சென்று பார்த்தபோது தாய்லாந்து மொழியில் இருந்தது. மேலும், இந்தியாவிலும் கூட இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.

இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து இதன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களுக்கு சென்று பார்த்தோம். அதில் 10 ஆண்டுகளாக வீடியோ மற்றும் போஸ்ட் பதிவிடப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 12 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்துள்ளது. அதனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவை இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலிருந்து எடுக்க முடியவில்லை. 

TheNackKung என்ற யூடியூப் சேனலில் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் தாய்லாந்திலிருந்து என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த வீடியோ உண்மையில்லை, விளம்பரம் என்பது உறுதியானது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் அரவணைப்பினால் உயிருடன் வந்ததாக எடுக்கப்பட்ட விளம்பரப் படத்தில், நிறுவனத்தின் பெயரை மட்டும் நீக்கிவிட்டு சமூக ஊடகங்களில் உண்மை சம்பவம் போலப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விளம்பரம் என்று குறிப்பிட்டிருந்தால் இது உண்மையான வீடியோ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பிய குழப்பத்தைத் தவிர்த்திருக்க முடியும்!

முடிவு:

இறந்த குழந்தை தாயின் அரவணைப்பால் உயிர் பெற்றது என்று பகிரப்படும் வீடியோ தாய்லாந்து நாட்டைச் சார்ந்த விளம்பரப் படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தாயின் அணைப்பில் உயிர் பெற்ற குழந்தை என்று பரவும் விளம்பர வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context