
பா.ஜ.க வெற்றி பெறும் வார்டுகளில், மாட்டிறைச்சி நிரந்தரமாகத் தடை செய்யப்படும் என்றும் ஞாயிறு மட்டுமே அசைவ உணவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன், நியூஸ் தமிழ் ஊடகங்களின் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில், “இந்துக்கள் சனாதன கொள்கையைப் பின்பற்ற வேண்டும். பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சி நிரந்தரமாக தடை செய்யப்படும். ஞாயிறு மட்டுமே அசைவத்திற்கு அனுமதி. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை Idimurasu Ismail என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 19ம் தேதி பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில், “அண்ணாமலை சர்ச்சை கருத்து. பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை. ஞாயிறு மட்டும் அசைவத்திற்கு அனுமதி” என்று இருந்தது. இதை Naina Mohammed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இது மட்டுமின்றி, தந்தி டிவி, நியூஸ் 7 தமிழ் என பல ஊடகங்களின் நியூஸ் கார்டுகளிலும் இதே தகவல் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை அறிவோம்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் எல்லா பிரதான ஊடகங்களின் நியூஸ் கார்டைப் பயன்படுத்தி பாஜக வெற்றி பெறும் வார்டுகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே அசைவத்துக்கு அனுமதி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

அண்ணாமலை இவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆனால், செய்தி ஊடகங்களில் பெயரில் நியூஸ் கார்டு பரவி வருகிறது. முதலில் ஜூனியர் விகடன், நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ், தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்களில் இந்த நியூஸ் கார்டு வந்ததா என்று பார்த்தோம். அவற்றில் எதிலும் இந்த நியூஸ் கார்டு இல்லை.
ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர், நியூஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் ஆகியோரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தனர். இதே போன்று நியூஸ் 7 தமிழ், தந்தி டிவி டிஜிட்டல் பிரிவுகளையும் தொடர்புகொண்டு இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்துகொண்டோம்.
உண்மையில் அண்ணாமலை இப்படி கருத்து ஏதும் தெரிவித்தாரா என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எஸ்.ஜி.சூர்யாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். இவை எல்லாம் போலியானவை. இப்படி எந்த ஒரு கருத்தையும் அண்ணாமலை கூறவில்லை” என்றார்.
முடிவு:
பாஜக வெற்றிபெரும் வார்டுகளில் அசைவ உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்காடுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாஜக வெற்றி பெறும் வார்டுகளில் ஞாயிறு மட்டுமே அசைவத்துக்கு அனுமதி என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
