தூத்துக்குடியில் கனிமொழியை விரட்டியடித்த மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் கனிமொழிக்கு "அக்கா நீங்க பேசினா மட்டும் போதும்" என்று மக்கள் அளித்த ஆதரவு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிப்பு

பொய் சொல்லி சொல்லி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த கனிமொழிக்கு மக்கள் தங்கள் பகுதிக்கு வந்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்த வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. தற்போது, அந்த வீடியோவை வைத்தே விரட்டப்பட்ட கனிமொழி என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை பார்க்கும் போது, அதில் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியுடன் சிலர் இருப்பதைக் காண முடிகிறது. கூட்டணிக் கட்சியினர் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை எல்லாம் விரட்டியடிக்க மாட்டார்கள். யாரும் அப்படி செய்தால் அதை எதிர்க்கவே செய்வார்கள். மேலும், வீடியோவில் யாரும் கனிமொழியை அங்கே பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கூறி விரட்டுவது போல இல்லை.

அக்கா நீங்க பேசினா போதும்கா என்று திரும்பத் திரும்ப ஒருவர் கூறுவதை கேட்க முடிகிறது. இது தொடர்பாக செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்தோம். சன் டிவி வெளியிட்டிருந்த வீடியோவில், மக்கள் வற்புறுத்தலைத் தொடர்ந்து கனிமொழி தன்னுடைய பிரசார வாகனத்திலிருந்து பேசுவதை காண முடிந்தது. மக்கள் அவருக்கு உற்சாகமாக ஆதரவு அளிப்பதையும் வீடியோவில் காண முடிந்தது. “அக்கா நீங்கள் கண்டிப்பாக பேச வேண்டும். ஒரு நிமிடமாவது பிரசார வாகனத்தின் மேல் நின்று பேசிவிட்டு செல்லுங்கள்” என்று சொல்வதை கேட்க முடிந்தது.

இதே வீடியோவை புதிய தலைமுறை தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது. அதில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனம் முற்றுகை என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தங்கள் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைத்த தர வேண்டும், தங்கள் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று மக்கள் முற்றுகையிட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. தங்கள் பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும், பேச வேண்டும் என்று மக்கள் கூறுவதை எப்படி விரட்டினர் என்று பொருள்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தங்கள் பகுதியில் கனிமொழி பேச வேண்டும் என்று அவரது வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவரை விரட்டியடிக்கும் நோக்கில் இந்த சம்பவம் நடைபெறவில்லை. இது கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பாகவே பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் கனிமொழியை விரட்டியடித்த மக்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கனிமொழி விரட்டியடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False