
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நாய்கள் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “20000 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய 20 கோடி ஒதுக்கீடு…
ஒரு நாய்க்கு பத்தாயிரம் ரூபாய் செலவு.. , ??மனுஷனுக்கு கூட இவ்வளவு செலவு ஆகாதே?
நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில், 20 கிலோ அரிசி பை மற்றும் ஒரு குளுக்கோஸ் கொடுப்பார்கள் அதுபோல இவர்கள் நாய்களுக்கும் கொடுக்க போகிறார்களா?
சரி நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா இல்லையா என்பது எப்படி கண்டுபிடிக்கிறது ..நாய்கள் தான் பேசாதே?
குடும்ப கட்டுப்பாடு செய்த நாய்களின் காதில் ஓட்டை போட்டிருப்போம் அது வைத்து கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்…
ஒரு நாயின் காதில் ஓட்டை போட 10 ரூபாய் கூட செலவு ஆகாதே, அப்பம் 20 கோடியும் ஊழல் தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது ஒரு நாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ஒதுக்கப்பட்டது போல பகிரப்பட்டு வருகிறது.
நாய் என்றாலும் அதுவும் ஒரு உயிர்தான்.
தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது. அரசின் இணையதளத்திலிருந்து பட்ஜெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்தோம். 103வது பக்கத்தில் கால்நடை பராமரிப்பு என்ற தலைப்பில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.
அதில், “கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உரிய இனப்பெருக்கத் தடை சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனதால், மாநிலத்தின் பல இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து, அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாகச் செயல்படுத்திடவும், தமிழ்நாட்டின் பல இடங்களில் இயங்கிவரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பட்ஜெட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த மட்டுமே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மனிதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யக் கூட இவ்வளவு ஆகாது என்று போகிற போக்கில் விஷமத்தைத் தெளித்துள்ளனர். இது தொடர்பாக பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் கேட்டோம். “குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து மருத்துவமனையின் நிலைக்கு ஏற்க கட்டணம் உயரும். பெண்களுக்கு ரூ.40 ஆயிரத்திலிருந்து தொடங்கும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டாலும் அந்த அறுவைசிகிச்சையைச் செய்ய மருத்துவமனைகளுக்கும் செலவாகிறது. அதை அரசுதான் கொடுக்கிறது” என்றார்.
நாய்க்கடி உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இனப்பெருக்க தடை அறுவைசிகிச்சை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கால்நடை மருத்துவம் படித்த மருத்துவரைக் கொண்டுதான் இதை செய்ய முடியும். அதற்கு என ஒரு கட்டமைப்பு தேவை. மேலும், நாய்களுக்கு அறுவைசிகிச்சை செய்கிறார்கள் என்றால் மருத்துவர் செலவு, நாயைப் பிடித்து வருபவர்களுக்கான ஊதியம், நாயை வைத்து சில நாட்கள் பராமரிக்க ஆகும் செலவு என்று பல விஷயங்கள் உள்ளன. இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடி ஒதுக்கி ஊழல் செய்கிறார்கள் என்று தவறாகப் பகிர்ந்திருக்கின்றனர்.
நம்முடைய ஆய்வில், இனப்பெருக்க தடைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், 20 ஆயிரம் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய தமிழ்நாடு அரசு ரூ.20 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக, வதந்தி பரப்புகின்றனர், என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கால்நடைகள் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு என்ற செய்தியை 20 ஆயிரம் நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைசிகிச்சை செய்ய ரூ.20 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழக பட்ஜெட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
