
கொரோனா நோயாளிகளுக்கு சுவாசத்திணறல் பிரச்னை ஏற்பட்டால் ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற ஹோமியோபதி மருந்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆஸ்பிடோஸ்பெர்மா (Aspidosperma) என்ற ஹோமியோபதி மருந்தின் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கொரோனா தொற்று மீண்டும் தொடரும் இந்த காலங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் பீதி அடைய வேண்டாம், ஹோமியோபதி மருந்து கடையில் #ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற சொட்டு மருந்து கிடைக்கும். தாமதமில்லாமல் வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் 20 drops மருந்து கலந்து நோயாளிக்கு கொடுங்கள். ஆக்ஸிஜன் அளவு உடனே மீண்டும் Normal ஆகிவிடும்.
Corona சமயத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காத போது, இந்த சொட்டு மருந்துதான் பலர் உயிரை காப்பாற்றியது. எப்போதும் வீட்டில் வைத்து இருங்கள். முதியவர்களுக்கு சமய சஞ்சீவியாக பயன்படும். #படித்தேன்_பகிர்ந்தேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021ம் ஆண்டு கொரோன பரவல் தீவிரமாக இருந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல உயிர்களை இழந்தோம். சுவாசத் திணறல் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் பட்ட அவஸ்தையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட மிக மோசமான சூழலில் செயற்கை சுவாசம் மூலம் ஆக்சிஜன் பெற ஏற்பாடு செய்யாமல், ஹோமியோபதி மருந்தை சாப்பிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்று அப்போதே மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
தற்போது 2025ல் மீண்டும் பல நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் கூட கொரோனா நோளாயிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தாத ஒமிக்ரான் வகை கொரோனா என்று சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் கவனக் குறைவாக இருந்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. இந்த சூழலில் மூச்சுத் திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் ஹோமியோபதி மருந்தைச் சாப்பிடும்படி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது பற்றி ஹோமியோபதி மருத்துவர் சுனிதாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “ஆஸ்பிடோஸ்பெர்மா மருந்தானது சுவாச மண்டல பிரச்னைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. சுவாசத் திணறல் பிரச்னைகளுக்காக இதை பரிந்துரைக்கிறோம். சுவாச மண்டலத்தைத் தூண்டி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. ஆனால் இதை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தகவல் கொரோனா உச்சத்திலிருந்த காலத்திலிருந்தே பரவி வருகிறது. கொரோனா நோயாளியின் நிலை என்ன, அவருக்கு அஸ்பிடோஸ்பெர்மா கொடுக்கலாமா அல்லது வேறு மருந்து சரியாக இருக்குமா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும்.
இந்த தகவல் தவறு என்று கூறிவிட முடியாது… ஆனால் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்துவிட்ட நிலையில் மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக இப்படி மருந்து எடுப்பது பலன் தருமா என்பதுதான் கேள்விக் குறி. கொரோனா மட்டுமல்ல தலைவலி, முடி உதிர்வு, பாலியல் சார்ந்த பிரச்னை என எல்லா பிரச்னைகளுக்கும் சமூக ஊடகங்களில், யூடியூபில் பரவும் பல தகவலை நம்பி பலரும் சுய மருத்துவம் செய்து கொள்கின்றனர். இது போன்ற வதந்திகளைத் தவிர்த்துவிட்டு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும், அவருக்கு என்ன மருந்து, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் மருத்துவர் நோயாளியின் நிலையை ஆராய்ந்து பரிந்துரைப்பார். சுய மருத்துவத்தைத் தவிர்த்து விட வேண்டும்” என்றார்.
இந்த மருந்து தொடர்பாக தமிழ்நாடு அரசு அல்லது இந்திய அரசு தரப்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதா என்று அறிய ஆய்வு செய்தோம். அப்போது, 2021ம் ஆண்டு கொரோனா உச்சத்திலிருந்த போது இந்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்டிருந்த சமூக ஊடக பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதில், “ஆஸ்பிடோஸ்பெர்மா க்யூ 20 மருந்து எடுப்பது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் என்று பரவும் தகவல் தவறானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “ஒருவருக்கு ஆக்சிஜன் தேவையா மற்றும் மாத்திரை மருந்து தேவையா என்பதை எல்லாம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவு செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஸ்டிடோஸ்பெர்மா மருந்து முற்றிலும் தவறானது என்று கூறிவிட முடியாது. ஆனால் இதை மட்டும் எடுத்துக்கொண்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை சரியாகி, நோயாளி உயிர் பிழைத்துவிடுவார் என்று கூறும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஹோமியோபதி மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பரவும் தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தி உயிரிழப்பு வழிவகுக்கலாம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கொரோனா நோயாளிகள் ஆஸ்பிடோஸ்பெர்மா மருந்து சாப்பிட்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?
Written By: Chendur PandianResult: Misleading
