“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம்

கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு ஏற்படுகிறது என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Advocate Arulmozhi 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

வழக்கறிஞர் அருள்மொழி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல், “கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு ஏற்படுகிறது… – அருள்மொழி, திராவிடர் கழகம்” என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் மிகவும் அருவருப்பான வகையில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Samy M என்பவர் 2019 ஜூன் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திராவிடர் கழக கொள்கைகள், பெரியார் பற்றி மிகவும் துணிவுடன் பேசி வருபவர் வழக்கறிஞர் அருள்மொழி. இவரைப் பற்றி மிகவும் தவறான முறையில் விமர்சித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருக்கும்போது எனக்கு காம உணர்வு ஏற்படுகிறது என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். அருள்மொழி கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர், அவர் கோவிலுக்கு செல்கிறார் என்பதே தவறானதாக இருந்தது.

ஆண்கள் கோவிலுக்குள் சட்டை அணியால் செல்வது பற்றி எப்போதாவது பேசியிருக்கிறாரா என்று ஆய்வு செய்தோம். அப்போது வீடியோ ஒன்று கிடைத்தது.

அதில், கோவிலுக்குள் செல்லும் ஆண்கள் ஏன் சட்டையை கழற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று ஒரு விளக்கம் அளித்திருந்தார். 5.20வது நிமிடம் அந்த பேச்சைக் கேட்கலாம். அது சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நாம் செல்ல விரும்பவில்லை. அந்த வீடியோ முழுவதையும் பார்த்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று அருள் மொழி பேசியதாக ஒரு இடம் கூட வரவில்லை.

வேறு ஏதாவது விவாதம், மேடையில் இவ்வாறு பேசினாரா என்று தேடினோம். அப்போது, பெண் அடிமைத்தனம் பற்றி அவர் பேசிய வீடியோ கிடைத்தது. அதில் கூட, ஆண்களைப் போன்று பெண்கள் உடை அணிய வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதாவது ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் தெரியாத வகையில் உடை அணிய வேண்டும் என்று சொன்னார் என்று விரிவாக பேசியது தெரிந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று அருள்மொழி பேசியதாக எந்த ஒரு செய்தியும், வீடியோவும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து திராவிடர் கழக வழக்கறிஞர் குமாரதேவனைத் தொடர்புகொண்டு பேசினோம். “சகோதரி அருள்மொழியைப் பற்றி மிகத் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். அப்படி பேசக் கூடிய நபர் அருள்மொழி இல்லை. இது முற்றிலும் தவறானது, கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்த பதிவுக்கு ஒருவர் பதில் அளித்திருந்தார். அதில், பெண்ணடிமைத்தனம் பற்றி அந்த அம்மா பேசுகிறார். அது கூட புரியவில்லையா என்று கேட்டிருந்தார். ஆனாலும், பதிவில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்றே தெரிந்தது.

Advocate Arulmozhi 3.png

கடவுள் மறுப்பு கொள்கையை பேசக்கூடியவர் அருள்மொழி. ஆண்கள் ஏன் சட்டை அணியாமல் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பதற்கு திராவிட பார்வையில் விளக்கம் அளித்திருந்தார். அதற்கு அரசியல், சமூக ரீதியாக பதில் கொடுத்திருக்கலாம். அதைவிடுத்து, அவதூறான, பொது வெளியில் பெண்கள் பற்றிச் சொல்லப் பயன்படுத்த முடியாத வார்த்தைகளை பயன்படுத்திப் பதிவிட்டிருப்பதும், அதற்கு கமெண்ட் செய்திருப்பதும் வேதனை அளிப்பதாக இருந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், அருள் மொழி அப்படிப் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. திராவிடர் கழக நிர்வாகி இந்த பதிவை கண்டித்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு திட்டமிட்ட அவதூறான, கீழ்த்தரமான, தவறான பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False