
கிறிஸ்தவ, மதமாற்றக் கருத்துக்களை பள்ளி பாட புத்தகத்தில் ரகசியமாக சேர்த்தேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி முதல்வர் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாதிரியார்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. திடீரென்று ஒருவர் மைக் பிடித்து பேசும் காட்சிகள் வருகின்றன. அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார். அதை தமிழில் மொழிபெயர்த்து கீழே கொடுத்திருந்தனர். அதில், பாதர் ஜோ அருண், லயோலா இயக்குனர், சென்ட் ஜோசப் காலேஜ்ல தேர்வு எழுதவேண்டாம்னு கொண்டுவந்தேன். அத பாராட்டி தமிழக அரசு என்ன 1ம் வகுப்பிலேந்து +2 வரை சமுக அறிவியல் பாட திட்டத்த மாத்தி எழுதற குழுவுல போட்டாங்க. 1ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தை பாருங்க. எக்கச்சக்கமா ஏசு கதை, மதம் மாத்திர விசயம் இருக்கும். நான் தான் யாருக்கும் தெரியாம சொருகிட்டேன் என்று இருந்தது. திடீரென்று பாதிரியார் பேசும் காட்சிகள் வருகின்றன. பாதர் ஜோ அருண், லயோலா ஸ்டாலினை புகழ்ந்து என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “தமிழக அரசு பாடநூலில், யாருக்கும் தெரியாமல் கிரிஸ்தவ தத்துவங்களை, மதமாற்றம் குறித்த பாடங்களை ரகசியமாக சேர்த்து விட்டேன். முதல்வர் முன்னிலையில் லயோலா கல்லூரி இயக்குநர் ஜோ அருண் ஒப்புதல்.!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பதிவை Santhana Nadar A என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை லயோலா கல்லூரியில் உள்ள லீபா எனப்படும் லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் (LIBA-CHENNAI) என்ற கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநராகப் பாதிரியார் ஜோ அருண் உள்ளார். அந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாதிரியார் ஜோ அருண் பேசியதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது.
பாதிரியார் ஜோ அருண் ஆங்கிலத்தில் பேசியதற்குக் கூடுதலான அர்த்தத்தை வரும் வகையில் மொழிமாற்றம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் பேசினார் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை அளித்தது. எனவே, இந்த பதிவில் உள்ள தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.
முதலில் மு.க.ஸ்டாலின் நடந்து வரும் காட்சியைத் தேடி எடுத்தோம். லீபா கல்வி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ இருந்தது. லிபா புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருகிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜோ அருண் வரவேற்புரையாற்றுகிறார். அவர் பேச்சில் பாடத்திட்டம் தொடர்பாக ஏதேனும் பேசினாரா என்று பார்த்தோம். அதில் அப்படி எதுவும் இல்லை.
அடுத்ததாக ஜோ அருண் பேசிய பழைய வீடியோவை தேடி எடுத்தோம். அந்த வீடியோவை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி லயோலா கல்லூரி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில், உயர் கல்வி தொடர்பான தேசிய கருத்தரங்கம் 2018 நவம்பர் 23, 24ம் தேதி நடந்தது என்றும், அதில் பாதிரியார் ஜோ அருண் பேசியது என்றும் குறிப்பிட்டிருந்தனர். அந்த வீடியோவை முழுவதும் பார்த்தோம். மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் இல்லை. மேலும் இந்த கருத்தரங்கம் நடந்தபோது மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்தான். 2021 மே மாதம்தான் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அந்த வீடியோவில் பாதிரியார் ஜோ அருண் பேசும்போது, “நான் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இயக்குநராகப் பொறுப்பேற்றதும் தேர்வு முறையை ஒழித்தேன். என்னுடைய செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு என்னை அழைத்து 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக என்னை நியமித்தது. ஒன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் ஏராளமான ஏசு சபையின் சித்தாந்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இது யாருக்கும் தெரியாது. முதலாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முழுக்க படங்கள்தான் இருக்கும். அது என்னுடைய யோசனையாகும். தேனி மாவட்டத்தைச் சார்ந்த புவியியல் ஆசிரியர் புவியியல் பாடத்தை நடத்துகிறார் என்றால் முதலில் அவர் செய்ய வேண்டியது, அந்த ஊரின் மண்ணை கையில் எடுத்து மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். இதற்கு முன்பு மாணவர்கள் சதுப்புநில காடுகள் பற்றி எல்லாம் படித்துக்கொண்டிருந்தார்கள்” என்று கூறுகிறார். அந்த பாதிரியார் இயேசு பற்றிய கதைகள், மத மாற்றம் தொடர்பான கருத்துக்களை பாடப் புத்தகத்தில் புகுத்திவிட்டேன் என்று கூறவில்லை. முழு வீடியோவைப் பார்த்தோம். எங்கும் அவர் அப்படிக் கூறவில்லை.

இயேசு சபையின் சித்தாந்தங்கள் என்ன என்பது பற்றி நாம் ஆய்வு செய்யவில்லை. 1ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முழுக்க இயேசு கதைகள், கிறிஸ்தவ கொள்கைகள்தான் உள்ளதா என்று பார்த்தோம். 1ம் வகுப்பில் சூழ்நிலையியல் என்ற பாடம் இருந்தது. அதில் கிறிஸ்தவ கொள்கை தொடர்பான தகவல் எதுவும் கண்டறிய முடியவில்லை. பாதிரியார் பேசும் வீடியோ 2018ம் ஆண்டே வெளியாகிவிட்டது. 1ம் வகுப்பு பாட புத்தகத்தில் கிறிஸ்தவ கொள்கை, கோட்பாடு, இயேசுவின் கதை எல்லாம் இடம் பெற்றிருந்தால் பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி அவற்றை நீக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்தது போல இல்லை.
அசல் பதிவைக் காண: tntextbooks
அடுத்ததாக இயேசு பிறப்பு பற்றி பாதிரியார் ஜோ அருண் பேசும் வீடியோவை தேடி எடுத்தோம். அந்த வீடியோ யூடியூபில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் 22-12-2018 அன்று திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் புனித வளனார் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஜோ அருண் பேசிய காட்சி என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த வீடியோவும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
2018ம் ஆண்டு பாதிரியார் ஜோ அருண் பேசியதை, 2021 அக்டோபரில் லயோலா கல்லூரியில் உள்ள லீபா என்ற கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசியது போன்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் பள்ளி பாடபுத்தகத்தில் இயேசு கதை மற்றும் மத மாற்றம் தொடர்பான கருத்துக்களை சேர்த்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாதிரியார் கூறினார் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பள்ளி பாடத்திட்டத்தில் இயேசு கதையை ரகசியமாக சேர்த்தேன் என்று பாதிரியார் ஒருவர் கூறினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பள்ளி பாடப் புத்தகத்தில் இயேசு கதையை சேர்த்தேன் என்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லயோலா கல்லூரி இயக்குநர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
