
பைபிளில் இடம் பெற்ற எஸ்தர் என்ற நூலின் அசல் சுருள் பிரதி ஈரானில் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அந்தக் காலத்துப் பைபிள் சுருள் போன்று காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் எஸ்தர் புத்தகம் சுருளி வடிவில் தங்கத்தினாலானது ஈரானில் கிடைத்துள்ளது 1500 வருட பழமை வாய்ந்தது…PURIM: The original book of Esther was recently discovered by a Jew in Iran who lived there. The scroll written in pure gold is more than 1500 years old” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Koodankulam Sda Church என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கிறிஸ்தவர்களின் விவிலியத்தில் பழைய ஏற்பாடு பகுதியில் எஸ்தர் என்ற புத்தகம் இடம் பெற்றுள்ளது. யூதர்களின் புனித நூலாகவும் எஸ்தர் கருதப்படுகிறது. எஸ்தர் கதை பாரசீக நாட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, இன்றைய ஈரான் நாட்டில் நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எஸ்தரின் கல்லறை கூட ஈரானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், எஸ்தர் புத்தகம் ஈரானில் கிடைத்தது என்று கூறப்பட்டதால் உண்மையாக இருக்கலாம் என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
எஸ்தர் புத்தகத்தில் இடம் பெற்ற கதையானது இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரிஜினல் புத்தகம் கிடைத்தது என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உண்மையில் இப்படி ஒரு சுருள் ஈரானில் கிடைத்ததா என்று ஆய்வு செய்தோம்.
கூகுளில் எஸ்தர் புத்தகம், 1500 ஆண்டு பழமை, ஈரான் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஸ்பெயின் பகுதியில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த எஸ்தர் சுருள் கிடைத்ததாக செய்திகள் கிடைத்தன. ஈரானில் எஸ்தர் உள்ளிட்ட எந்த ஒரு பழமையான பைபிள் புத்தகம் எதுவும் கிடைத்ததாக செய்தி கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்த மிகப் பழமையான எஸ்தர் புத்தகம் 15ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஒரு செய்தி கூட கிடைத்தது. அதைவிட பழமையான எஸ்தர் புத்தகம் கிடைத்ததாக எந்த செய்தியும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: timesofisrael.com I Archive
அதே நேரத்தில் ஏ.எஃப்.பி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் கட்டுரைகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த கட்டுரையில், வீடியோவில் ஒரு நபர் எந்த ஒரு பாதுகாப்புமின்றி சுருளைத் திறக்கிறார். மிகப் பழமையானது என்றால் இப்படி திறக்க முடியாது. மேலும், அதில் உள்ள எழுத்துக்களை வைத்துப் பார்க்கும் போது அது எஸ்தர் புத்தகமாகவோ, 1500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்தமாகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்று ஹீப்ரு மொழி அறிஞர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நியூயார்க் பல்கலைக் கழகத்தில் உள்ள யூத ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளரும் பேராசிரியரும், இயக்குநருமான லாரன்ஸ் ஷிஃப்மேனிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எஸ்தர் புத்தகம் கிடைத்ததாக கூறப்படுவது உண்மையில்லை. இது போலியானது. ஈரானில் கிடைத்ததாக குறிப்பிடப்படும் சுருளில் இடம் பெற்ற சில எழுத்துக்கள், சின்னங்கள் மிகவும் பிற்காலத்தைச் சார்ந்தவை. சமீப காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பைபிள் தொடர்பான புராதன பொருட்கள் கிடைத்ததாக சில பொருட்களை பலரும் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒன்றும் அறியாதவர்களை ஏமாற்றலாம், யூதம், ஹீப்ருவை அறிந்தவர்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 1500 ஆண்டுகள் பழமையான ஒரிஜினல் எஸ்தர் புத்தகம் கிடைத்தது என்று பகிரப்படும் தகவல் உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பைபிளின் 1500 ஆண்டுகள் பழமையான உண்மையான எஸ்தர் புத்தகம் ஈரானில் கிடைத்தது என்று பரவும் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:1500 ஆண்டுகள் பழமையான ஒரிஜினல் பைபிள் எஸ்தர் சுருள் ஈரானில் கிடைத்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
